கடலூர்:
சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களுக்கு, வங்கிகள் கூடுதல் கடன் வழங்க முடிவு செய்துள்ளன. எனவே இந்த வாய்ப்பை சுயஉதவிக் குழுக்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி கேட்டுக் கொண்டார்.
சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிகள் கடன் வழங்கி, 20 ஆண்டுகள் நிறைவு அடைவதை யொட்டி, கருத்தரங்கம் கடலூரில் செவ்வாய்க்கிழமை நடந்தது. நபார்டு வங்கி இந்தக் கருத்தரங்கத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தது.
கருத்தரங்கைத் தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சியர் பேசியது:
அரசின் திட்டங்கள் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் சென்றடைகின்றன. தொழில் தொடங்குவதற்கு சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களை அவர்கள், தொழில் தொடங்காமலேயே தங்களுக்குள் பிரித்து எடுத்துக் கொள்ளக் கூடாது. சுயஉதவிக் குழுக்கள் வங்கிக் கடன்களைப் பெற்று, தொழில்களைத் தொடங்கி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதுடன், வாங்கிய கடன்களை ஒழுங்காக வங்கிகளுக்குத் திருப்பிச் செலுத்தும் வகையில், சுயஉதவிக் குழுக்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். இந்தியாவில் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதில், ஆந்திர மாநிலத்துக்கு அடுத்தபடியாக, தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. வரும் ஆண்டுகளில் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதில் தமிழகம் முதல் இடத்துக்கு வரவேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்களுக்கு, வங்கிகள் அதிக அளவில் கடன் வழங்க முன்வந்து உள்ளன. சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பது தொடர்பான 17 தொழில்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்க உள்ளன. சுயஉதவிக் குழுக்களும் இத்தகைய தொழில்களைத் தொடங்க கடன்களை பெற்று முன்னேற வேண்டும் என்றார் ஆட்சியர். கருத்தரங்கத்துக்கு இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் எம்.சுந்தரராஜன் தலைமை வகித்தார்.
கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் எஸ்.ஆர்.வெங்கடேசன். மத்தியக் கூட்டுறவு வங்கியின் தனி அலுவலர் ந.மிருணாளினி, மாவட்டத் தொழில் மையப் பொதுமேலாளர் மகாலிங்கம், இந்தியன் வங்கியின் முதன்மை மேலாளர் உத்தமர்லிங்கம் ஆகியோர் பேசினர். நபார்டு வங்கியின் உதவிப் பொதுமேலாளர் ராஜகோபாலன் வரவேற்றார். முன்னோடி வங்கி மாவட்ட மேலாளர் ஜே.டி.கிருஷ்ணன் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக