உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 13, 2011

குடும்பத்துக்கு ஒரு குழந்தை போதும்: கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி

கடலூர்:

          ஆணோ பெண்ணோ குடும்பத்துக்கு ஒரு குழந்தை போதும் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்று, குடும்பநலத் துறையினரை, கடலூர் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி கேட்டுக் கொண்டார்.  

கடலூர் மாவட்டக் குடும்ப நலச் செயலகம் சார்பில் உலக மக்கள் தொகை நாள் விழா, கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடந்தது. விழாவுக்குத் தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி பேசியது:  

             2011-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின்படி, தமிழகத்தின் மக்கள் தொகை 7.2 கோடி. தமிழ்நாட்டில் ஒரு நிமிடத்துக்கு 2 குழந்தைகள் வீதம் பிறக்கின்றன. நாம் குடும்ப நலத்தைப் பேண வேண்டும். ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆண்குழந்தையோ ஒரு பெண் குழந்தையோ போதும் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும்.  கிராமங்களில் உள்ள பெண்களுக்கு மக்கள் தொகை பற்றி கிராமச் செவிலியர்கள் எடுத்துரைத்து, குடும்பத்துக்கு ஒரு குழந்தை போதும் என்ற எண்ணம் ஏற்படும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 

              இதற்காக கிராமச் செவிலியர்கள் உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.  குடும்ப நலச் சிகிச்சையில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் முதல் இடம் வகிக்கிறது. கடலூர் மாவட்டம் 6-வது இடத்தில் உள்ளது. கடலூரை முதல் இடத்துக்குக் கொண்டு வரும் வகையில், கிராமச் செவிலியர்கள் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். குடும்ப நலத்திட்டத்தில் கடலூர் மாவட்டம் முதல் இடத்தைப் பெற வேண்டும் என்றார் ஆட்சியர்.  உலக மக்கள் தொகை தின விழாவையொட்டி நடைபெற்ற கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்குப் பரிசுகளை, மாவட்ட ஆட்சியர் வழங்கிப் பாராட்டினார். 

              செவிலியர் பள்ளி மாணவிகளுக்குப் பரிசுகளையும், மாற்றுத் திறனாளிகளுக்கு காதொலிக் கருவிகளையும் ஆட்சியர் வழங்கினார்.  மருத்துவத்துறை இணை இயக்குநர் டாக்டர் கமலக்கண்ணன் வரவேற்றார். துணை இயக்குநர் (காசநோய் பிரிவு) மனோகரன், கடலூர் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மாவட்டத் திட்ட அலுவலர் கோ.அன்பழகி, மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி, மாவட்ட பார்வை இழப்புத் தடுப்புச் சங்கத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானஸ்கந்தன் உள்ளிட்டோர் பேசினர். சதாசிவம் நன்றி கூறினார். 





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior