உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 28, 2011

கலை, அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு இந்த ஆண்டு நல்ல வரவேற்பு

  

           கலை, அறிவியல் படிப்புகளுக்கு மாணவர்களிடையே வரவேற்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, கல்லூரிகளில் உள்ள படிப்புகளுக்கான இடங்களை 10 சதவீதம் உயர்த்த சென்னை பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

                 சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ்p 159 கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன. இந்தக் கல்லூரிகளில் பாட வாரியாக கலைப் படிப்புகளில் 70 மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளவும், அறிவியல் படிப்புகளில் 50 மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளவும் சென்னைப் பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.இந்த நிலையில் கலை, அறிவியல் படிப்புகளுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை அதிக வரவேற்பு மாணவர்களிடையே எழுந்துள்ளது. 30 சதவீதத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை இம்முறை அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து, இடங்களின் எண்ணிக்கையை உயர்த்தி அளிக்குமாறு, பல்கலைக்கழகத்தைக் கல்லூரிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.

 சென்னைப் பல்கலை துணைவேந்தர் க. திருவாசகம்:

             கலை, அறிவியல் படிப்புகளுக்குக் கடந்த ஆண்டைக் காட்டிலும் 30 சதவீதத்தினர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இப்போது கலை, அறிவியல் கல்லூரிகள் பக்கம் திரும்பியிருப்பதே இதற்குக் காரணம். இதுமட்டும் அல்லாமல் மூன்று ஆண்டுகளில் படிப்பை முடித்துவிடலாம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கட்டணம் கிடையாது. ஆனால் தொழில் படிப்புகளைப் படிக்க அதிகக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பவையும் கூடுதல் காரணங்கள். பொறியியல் படிப்புகளை முடித்தவர்களைக் காட்டிலும், கலை - அறிவியல் படிப்புகளை முடித்தவர்களுக்கு குறைந்த ஊதியம் கொடுத்தால் போதுமானது, 

                 இவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் செலவு குறைவு என்பதால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இப்போது கலை - அறிவியல் பட்டம் பெற்றவர்களைக் குறிவைக்கத் தொடங்கியுள்ளன. வேலைவாய்ப்புகள் அதிகரித்திருப்பதால், மாணவர்களிடையே கலை, அறிவியல் படிப்புகள் வரவேற்பை பெற்றுள்ளன. விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருப்பதைத் தொடர்ந்து, படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கையை உயர்த்தித் தருமாறு கல்லூரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. 

                      இதுவரை 19 கல்லூரிகள் இடங்களின் எண்ணிக்கையை 30 சதவீதம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன. இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையில் இணைப்புக் கல்லூரிகளில் வழங்கப்படும் அனைத்து படிப்புகளுக்கான இடங்களை 10 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது கல்லூரிகளுக்கு அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட இடங்களிலிருந்து 10 சதவீதம் உயர்த்தப்படும் என்றார்.


எம்.ஒ.பி. வைஷ்ணவ் கல்லூரி முதல்வர் நிர்மலா பிரசாத்:

                  கலை, அறிவியல் படிப்புகளுக்கு இம்முறை வரவேற்பு அதிகரித்துள்ளது என்றபோதும், வணிகவியல், பி.ஏ. ஆங்கில இலக்கியப் படிப்புகளுக்குத்தான் அதிக வரவேற்பு உள்ளது. வணிகவியல் படிப்புகளுக்கு வேலைவாய்ப்பு அதிகம் என்பதால் அப்படிப்புக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆங்கில இலக்கியம் முடித்தவர்களையே தேர்வு செய்கின்றனர் என்பதால் அப்படிப்புக்கும் வரவேற்பு அதிகரித்துள்ளது.

             எங்களுடைய கல்லூரியில் பி.காம். படிப்புகளுக்கு 4 பிரிவுகளின் கீழ் 400 இடங்கள் உள்ளன. இந்தப் படிப்புகளில் சேர கடந்த ஆண்டு 6,600 பேர் விண்ணப்பித்திருந்தனர். இம்முறை இந்த எண்ணிக்கை 8,600-ஆக உயர்ந்துள்ளது. கல்லூரியில் வழங்கப்படும் அனைத்துப் படிப்புகளுக்கும் இம்முறை 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு 9 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர் என்றார்.



எத்திராஜ் கல்லூரி முதல்வர் ஜோதி குமாரவேல்: 

              வணிகவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது.கலை, அறிவியல் பிரிவுகளில் ஒவ்வொரு படிப்புக்கும் கடந்த ஆண்டு 500 முதல் 600 பேர் வரை விண்ணப்பித்திருந்தனர். இந்த எண்ணிக்கை இம்முறை 600 முதல் 700-ஆக உயர்ந்துள்ளது. 500 இடங்கள் உள்ள வணிகவியல் படிப்புகளுக்கு 3,850 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால், இடங்களின் எண்ணிக்கையை 10 சதவீதம் வரை உயர்த்தித் தருமாறு பல்கலைக்கழகத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தோம்.

           மாணவர் சேர்க்கை முடிந்து, வகுப்புகளும் ஒரு மாதத்துக்கும் மேல் நடத்தப்பட்டுள்ள நிலையில், இடங்களின் எண்ணிக்கையை உயர்த்தித் தர பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதை மாணவர் சேர்க்கை நடைபெறும்போதே செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior