உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, செப்டம்பர் 02, 2011

கடலூர் மாவட்டத்தில் 3 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி போடும் பணி தொடக்கம்

கடலூர்;

                  கடலூர் மாவட்டத்தில் 3 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி போடும் பணி, 27-ம் தேதி தொடங்கியது.30 நாள்கள் தடுப்பு ஊசி போடும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று கால்நடைத் துறை அறிவித்தது. 

                    கோமாரி என்னும் வைரஸ் நோயால் இரட்டைக் குளம்புகள் கொண்ட கால்நடைகள் குறிப்பாக மாடுகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.இந்த நோய் ஒரு மாட்டிடம் இருந்து மற்றொரு மாட்டுக்கு, எளிதில் தொற்றிவிடும். இதனால் மாடுகளின் வாய் மற்றும் குளம்புகளில் புண் ஏற்படும். கறவை மாடுகளில் பால் உற்பத்திக் குறையும். எருதுகளின் வேலைத்திறன் குறையும். பசுக்கள் சினை பிடிப்பது தடைபடும்.இளம் கன்றுகள் இறக்க நேரிடும். கோமாரி நோயால் கால்நடைகள் இறப்பு குறைவாக இருந்தபோதிலும் பொருளாதார இழப்பு அதிகம். 

                 எனவே கடலூர் மாவட்டத்தில் 6 மாதங்களுக்கு ஒருமுறை கோமாரி நோய் தடுப்பு ஊசி, இலவசமாகப் போடப்பட்டு வருகிறது. தற்போது கடலூர் மாவட்டத்தில் 3 லட்சம் மாடுகளுக்கு, கோமாரி நோய் தடுப்பு ஊசி போடும் பணி, கடந்த 27-ம் தேதி தொடங்கியது.கால்நடைத் துறை மண்டல  இணை இயக்குநர் டாக்டர் குருபாக்கியம், உதவி இயக்குநர் ராமசாமி ஆகியோரின் உத்தரவின்பேரில், கால்நடைத் துறை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் ஆங்காங்கே கிராமங்களில் மாடுகளை கொண்டு வரச் செய்து தடுப்பு ஊசி போட்டு வருகிறார்கள். 

                கடலூர் பகுதியில் கால்நடை உதவி மருத்துவர் மோகன், கால்நடை ஆய்வாளர்கள் ராஜமச்சேந்திர சோழன், நாகராஜ், உதவி ஆய்வாளர் லட்சுமி ஆகியோர் அடங்கிய குழுவினர், தடுப்பு ஊசி போடும் பணியைச் செய்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் ஆகஸ்ட் 27-ம் தேதி தொடங்கி 30 தினங்களுக்குள், 3 லட்சம் மாடுகளுக்கு தடுப்பு ஊசி போடப்படும் என்று கால்நடைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior