நெய்வேலி:
என்எல்சி சுரங்கத்தில் தொடர்ந்து 8 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட மண்வெட்டும் இயந்திரம் ரூ.3.35 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் சுரங்கப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
என்எல்சி முதல் சுரங்கத்தில் மண் மற்றும் பழுப்பு நிலக்கரியை வெட்டியெடுக்க பக்கெட்வீல் எனும் சுரங்க இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. சுரங்கப் பயன்பாட்டுக்காக கடந்த 2002-ம் ஆண்டு சுரங்கப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட மண்வெட்டும் இயந்திரம் தொடர்ந்து இயங்கிவந்தது. இந்நிலையில் அதன் பாகங்கள் தேய்மானம் ஆனதை அடுத்து இயந்திரத்தை புதுப்பிக்கும் பணியை சுரங்க நிர்வாகம் மேற்கொண்டது. அதனடிப்படையில் ரூ.3 கோடியே 35 செலவில் அதன் உதிரிபாகங்கள் மாற்றியமைக்கப்பட்டு, காரைக்குடியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி மையத்தால் பரிந்துரைக்கப்பட்ட வர்ணம் பூசப்பட்டு, மீண்டும் சுரங்க செயல்பாட்டுக்காக தயார்படுத்தப்பட்டது.
இதைடுத்து புதுப்பிக்கப்பட்ட இயந்திரத்தை என்எல்சி சுரங்க இயக்குநர் பி.சுரேந்திரமோகன் வியாழக்கிழமை இயக்கிவைத்தார். மேலும் சுரங்கம் 1ஏ பகுதியில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு, அது முறைப்படி வியாழக்கிழமை தொழிலாளர்களின் பயன்பாட்டுக்கு விரிவுப்படுத்தப்பட்டது. இதையும் சுரங்க இயக்குநர் பி.சுரேந்திரமோகன் தொடங்கிவைத்தார்.
மேலும் சுரங்க 1ஏ-வின் அடித்தளத்துக்கு செல்ல சிறப்பு சரிவுப் பாதைகள் அமைக்கப்பட்டு, அவையும் சுரங்க இயக்குநரால் செயல்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுரங்க செயல் இயக்குநர்கள் ராமகிருஷ்ணன்,ராமலிங்கம், முதன்மைப் பொதுமேலாளர்கள் வீரபிரசாத், வைத்தீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக