உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
திங்கள், அக்டோபர் 03, 2011

கடலூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா


கடலூர் நகராட்சி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கிறார் மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி.

கடலூர்:

         மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு, கடலூர் நகராட்சி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

             ஏகாம்பரம், தேவநவநாதன் உள்ளிட்ட தியாகிகள் பலரும் கலந்துகொண்டனர். கடலூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில், காந்தி பிறந்த தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடலூர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில், நகரத் தலைவர் ரகுபதி தலைமையில், மாநில துணைத் தலைவர் பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் நகரின் முக்கிய வீதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாகச் சென்றனர். 

            காந்தி, காமராஜர் சிலைகளுக்கு பி.ஆர்.எஸ். வெங்கடேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்டத் துணைத் தலைவர்கள் சுப்பிரமணியன், அருள்பிரகாசம், மாவட்டச் செயலாளர் கலை.விஜயகுமார், வட்டாரச் செயலாளர் கே.கே.ராஜலிங்கம், நகரச் செயலாளர்கள் சிவகவி, செல்வகுமார், துணைச் செயலாளர் கார்த்திகேயன், இளைஞர் காங்கிரஸ் தொகுதித் தலைவர் ராமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நெய்வேலி:

            என்எல்சி நிறுவனம் சார்பில் காந்தி ஜெயந்தி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

என்எல்சி நகர நிர்வாக அலுவலகம் எதிரேயு காந்திசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி, லிக்னைட் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் பேசியது:

            காந்தியடிகள் இட்ட வலிமையான அடித்தளத்தால் இன்று நமது நாடு பொருளாதாரத்தில் வலிமைமிக்கதாகத் திகழ்கிறது.நாட்டு மக்களிடையே சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை களைந்து இந்தியாவை ஒரே உணர்வுடைய தேசமாக உருவாக்கப் பாடுபட்டார் என்றார் அன்சாரி. முன்னதாக பகவத்கீதை, பைபிள், திருக்குர் ஆன், திருக்குறள், நாலாடியார் போன்ற புனித நூல்களிலிருந்து கருத்தரைகள் எடுத்துரைக்கப்பட்டன. நெய்வேலி பள்ளிகள், இந்தியக் கிறிஸ்தவ கலாசாரச் சங்கம், நெய்வேலி தமிழ்மன்றக் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் இப்புனித நூல்களிலிருந்து கருத்துரை வழங்கினர்.

            தொடர்ந்து நெய்வேலி மகளிர் மன்றம் சார்பில், என்எல்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் நோட்டுப்புத்தகம் வழங்கப்பட்டன. நெய்வேலி மகளிர் மன்ற தலைவி கிஷ்வர்சுல்தானா அன்சாரி, துணைத்தலைவர் காவேரி சிவஞானம், இயக்குநர்கள் எஸ்.கே.ஆச்சார்யா, சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை என்எல்சி நகர நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற சர்வ சமயப் பெருவிழாவில் பங்கேற்ற மும்மதத் தலைவர்கள் (இடமிருந்து) போதகர் ஜெயராஜ், இமாம் ஷவுக்கத்அலி
சிதம்பரம்:

            சிதம்பரத்தின் பல்வேறு இடங்களில் காந்திஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காந்தியடிகளின் 143-வது பிறந்தநாள் விழா சர்வ சமயப்பெருவிழாவாக நடைபெற்றது.

            தாளாளர் வீனஸ் எஸ்.குமார் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜி.மகேஷ்சுந்தர் முன்னிலை வகித்தார். விழாவில் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் குப்புசாமி தீட்சிதர், தேவாலய போதகர் ஜெயராஜ், கொள்ளிடம் தைக்கால் ரஹமானியா பள்ளிவாசல் இமாம் ஷெளகத் அலி ஆகியோர் மும்மத போதனைகளை எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியை ஆசிரியர் சோமு தொகுத்து வழங்கினார். அர்ஜூன் நன்றி கூறினார். அண்ணாமலை நகர் பள்ளிவாசல் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

காங்கிரஸ்: 

               கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காந்தி பிறந்ததின விழா நடைபெற்றது. நாடாளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் பி.பி.கே.சித்தார்தன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள் பி.வெங்கடேசன், சி.பி.ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் என்.கணேஷ் வரவேற்றார். மகாத்மா காந்தி சிலைக்கு முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்தார். காமராஜர் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு நகராட்சி தலைவருக்கான காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் செந்தில்வள்ளி மாலை அணிவித்தார். நகரச் செயலாளர் என்.சேகர் நன்றி கூறினார்.

விஜய் மக்கள் இயக்கம்: 

            காந்திஜெயந்தியை முன்னிட்டு நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் காந்திசிலைக்கு நகரத் தலைவர் எஸ்.அருண்ராஜ், இளைஞரணித் தலைவர் ஆர்.எஸ்.பாலு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர செயலாளர் ராமலிங்கம், துணைத்தலைவர் கென்னடி, நகர அமைப்பாளர் லிங்கேஷ், மாலிக், குரு, இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விருத்தாசலம்:

                 விருத்தாசலத்தில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி விருத்தாசலம் அரசு மருத்துவமனை, வள்ளலார் குடிலில் உள்ளவர்களுக்கு பழம் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், லயன்ஸ் சங்கத் தலைவர் ரவி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மணிவாசகம், பொருளாளர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் அன்புச்செழியன், சோஹன்லால்ஜெயின், ஜெய்சங்கர், சங்கர், அருணாசலம், விருத்தகிரி உள்ளிட்டோர் வாழ்த்தினர். லயன்ஸ் சங்க செயலர் அம்பலநாதன் நன்றி கூறினார்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior