உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 22, 2011

கடலூரில் ரயில்வே சுரங்கப் பாதைப் பணி: ரயில்வே கேட்டை கடக்க முடியாமல் பொதுமக்கள் அவதி


 


சுரங்கப் பாதை திட்டத்துக்காக கடலூர் லாரன்ஸ் சாலை ரயில்வே கேட் மூடப்பட்டு குழிகள் தோண்டப்பட்டு இருந்தும், ஆபத்தை உணராமல் அவ்வழியாகச் செல்லும் பாதசாரிகள்

கடலூர்:

             கடலூரில் ரயில்வே சுரங்கப் பாதைப் பணிக்காக நிரந்தமாக மூடப்பட்ட ரயில்வே கேட்டை, பாதசாரிகளும், இரு சக்கர வாகன ஓட்டிகளும் கடந்து செல்வது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  

               கடலூர் மக்களின் நீண்டகால கோரிக்கையான திருப்பாப்புலியூர் ரயில்வே சுரங்கப் பாதைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ரயில்வே கேட் நிரந்தமாக மூடப்பட்டு விட்டது. பில்லர்கள் அமைப்பதற்காக குழிகளும் தோண்டப்பட்டு உள்ளன.  ஆனால் அப்பகுதியில் உள்ள சிறிய சந்து வழியாக, 10 அடி ஆழப் பள்ளம் அருகே நூற்றுக் கணக்கான பாதசாரிகளும், இரு சக்கர வாகன ஓட்டிகளும் கடந்து செல்கிறார்கள். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் பலர் இவ்வழியைப் பயன்படுத்துகிறார்கள்.  எதிர்பாராமல் பள்ளத்தில் விழுவதற்கும், ஓடும் ரயிலில் அடிபடுவதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன என்பதை பொதுமக்கள் ஏனோ உணரவில்லை.  ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படுவதால், அப்பகுதியை முழுவதுமாக மூட வேண்டும். 

                  ஆனால் அவ்வாறு செய்யாததால் பொதுமக்கள் தொடர்ந்து அந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர்.  சில வியாபாரிகளின் நெருக்குதல் காரணமாக, காய்கறி மூட்டைகளை எளிதில் எடுத்துச் செல்ல வசதியாக, ஒற்றையடிப் பாதை ஒன்றை ரயில் தண்டவாளங்கள் வழியாக அமைக்கும் முயற்சிக்கு, திருப்பாப்புலியூர் ரயில்வே நிலைய அதிகாரிகள் திங்கள்கிழமை அனுமதி அளித்தனர்.  அவ்வாறு பாதை அமைப்பதால், அவ்வழியாகச் செல்லும் பாதசாரிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதை உணர்ந்து, உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி அப்பாதை செவ்வாய்க்கிழமை மூப்பட்டது.  ரயில் பயணிகள் இடையூறின்றி ரயில் நிலையத்துக்கு வந்துபோக வசதியாக, மேற்குப் பாதையை திறந்து விடுவதே சரியான தீர்வாக அமையும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior