உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வெள்ளி, ஜனவரி 27, 2012

கடலூர் மாவட்டத்தில் "தானே" புயல் பாதிப்பு காரணமாக பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தள்ளிவைப்பு 
 
          "தானே' புயல் பாதிப்பு காரணமாக, கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வை 6 நாள்கள் தள்ளிவைத்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
 
          இதையடுத்து, கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 8 முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளன.பிளஸ் 2 பொதுத்தேர்வை இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் சுமார் 9.63 லட்சம் பேர் எழுத உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 26 ஆயிரம் பேர் எழுத உள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 8 முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது
 
          பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 2 முதல் 20 வரை நடத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் மாணவர்களை முழுமையாகத் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் நோக்கில் செய்முறைத் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்று கடலூர் மாவட்டத்தில் மட்டும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வை பிப்ரவரி 8 முதல் 25 வரை நடத்தலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
 
        புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்சார இணைப்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டதோடு, பள்ளிகளில் வகுப்பறைகளும் பாதிக்கப்பட்டன. அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பிறகு ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், புயல் பாதிப்பு காரணமாக பள்ளிகள் ஜனவரி 19-ம் தேதிதான் திறக்கப்பட்டன.குடியிருப்புகள், பள்ளிகளுக்கு முன்னுரிமை வழங்கி மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 
 
           ஆனாலும், மாவட்டம் முழுவதும் மின் விநியோகம் ஜனவரி 29-க்குள் சீரடையும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.தொலைவில் உள்ள கிராமப் பகுதிகளுக்கு இன்னமும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. அந்தப் பகுதிகளில் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இந்தப் பகுதிகளுக்கு பிப்ரவரி 2-ம் தேதிக்குள் மின் இணைப்பு வழங்கப்பட்டுவிடும். இருந்தாலும், பிளஸ் 2 செய்முறைத் தேர்வுக்கு மின் இணைப்பு அவசியம் என்பதால், அந்த மாவட்ட அதிகாரிகள் தேர்வைத் தள்ளிவைக்குமாறு கோரிக்கை விடுத்ததாகத் தெரிகிறது. முன்னெச்சரிக்கை அடிப்படையில் விடப்பட்ட இந்தக் கோரிக்கையை ஏற்று, அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்முறைத் தேர்வுகளை 6 நாள்கள் தள்ளிவைத்துள்ளது.
 
          செய்முறைத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டாலும் மாவட்டத்தில் எழுத்துத் தேர்வு தேதிகளில் எந்தவித மாற்றமும் இருக்காது என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior