பச்சை வண்ண ரேஷன் அட்டை உள்ள பலருக்கும் இன்னமும் நிவாரணத் தொகை கிடைக்கவில்லை என்பதே உண்மை.
கடலூர்:
கடந்த டிசம்பர் 30-ம் தேதி காலை 140 கி.மீ. வேகத்தில் வீசிய "தானே' புயல், கடலூர் மாவட்ட மக்களை, அவர்களின் வாழ்வாதாரங்களை, பொருளாதாரத்தை சிதைத்து சின்னா பின்னமாக்கி விட்டது. ரூ.100 கோடி சேதம் என்று மாவட்ட நிர்வாகம் முதலில் அறிவித்தது.
ஆய்வு நடத்தியபோது சேத மதிப்பு ரூ. 5 ஆயிரம் கோடியைத் தாண்டியது. இது அரசின் உத்தேசமான தகவல் என்றாலும் சேதமதிப்பு இன்னமும் அதிகம். மொத்தம் 4,05,889 வீடுகள் (40,064 வீடுகள் முழுமையாக, 3,65,825 பகுதியாக) சேதம் அடைந்ததாக அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. சேதம் அடைந்த வீடுகளுக்கு திங்கள்கிழமை வரை ரூ.112.98 கோடி நிவாரணம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் அரசு தெரிவிக்கிறது.
கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி வட்டங்கள்தான் புயலில் அதிகம் பாதிக்கப்பட்டதாக அரசு தெரிவிக்கிறது. ஆனால் வட்ட வாரியாக பார்த்தால் கடலூரில் 1,07,301 வீடுகளுக்கும், பண்ருட்டியில் 1,04,771 வீடுகளுக்கும், சிதம்பரத்தில் மாவட்டத்திலேயே அதிகமாக 1,20,191 வீடுகளுக்கும் நிவாரணம் அறிவிக்கப் பட்டுள்ளது. சேதம் அடைந்த வீடுகளுக்கு மட்டும் நிவாரணம் என்று முதலில் வெளியான அறிவிப்பு பின்னர், பச்சை வண்ண ரேஷன் அட்டை உள்ள அனைவருக்கும் என்று வெளியானது.
மொத்தம் உள்ள 7 வட்டங்களில் சுமார் 6 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ள கடலூர் மாவட்டத்தில், மோசமாக பாதிக்கப்பட்ட 4 வட்டங்களில் மட்டும் 4 லட்சம் பேருக்கு நிவாரணம் வழங்கப்படுவதாக அரசு தெரிவிக்கிறது. அதிகம் பாதிக்கப்பட்ட கடலூர் நகராட்சிப் பகுதியில் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை தரும் தகவலின்படி, மொத்த குடும்ப அட்டைகள் (போலிகள் உள்பட) 48,240. இதில் முதல் கட்டமாக 43,683 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டு இருப்பதாக நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் விடுபட்டவர்கள் 18 ஆயிரம் பேருக்கு (ரேஷன் அட்டை உள்ளவர்கள்) நிவாரணம் வழங்க 2-வது பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதில் 6,454 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டு விட்டதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அப்படியெனில் நிவாரணம் பெற வேண்டியவர்கள் 61,683 என்றும், இதுவரை நிவாரணம் பெற்றவர்கள் 49,683 என்றும் புள்ளி விவரம் மூலம் தெரிய வருகிறது. 48 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ள நகரில், சுமார் 50 ஆயிரம் பேருக்கு நிவாரணமா என்று கேட்டால், ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டது என்கிறார்கள். நிவாரணம் பெற வேண்டியவர்கள் 61,683 என்று கணக்கிட்டால், சுமார் 19 ஆயிரம் பேருக்கு ரேஷன் அட்டை இல்லையா என்ற கேள்வி எழுகிறது. ஆனால் புயல் நிவாரணம் கோரி தினமும் நடைபெறும் போராட்டங்களோ இன்னமும் ஓய்ந்தபாடில்லை.அரசுத் துறைகளிடையே முரண்பாடான புயல் நிவாரணப் பட்டியல்கள் உள்ளன.
நிவாரணம் வழங்குவதில் உள்ள குளறுபடிகள் காரணமாகவே மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. பச்சை வண்ண ரேஷன் அட்டை உள்ள பலருக்கும் இன்னமும் நிவாரணத் தொகை கிடைக்கவில்லை என்பதே உண்மை. காரணம் புயலுக்கு அரசு வழங்கிய நிவாரணம் அரசியல் நிவாரணமாக மாறிவிட்டது என்பதே மக்களின் புகார். கிடைக்க வேண்டிய பலருக்கு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பல கோடிகளை செலவிட்டவர்களுக்கோ, இந்த நிவாரண உதவி வழங்கும் பணி நல்ல வாய்ப்பாகி விட்டது என்கிறார்கள் பொதுமக்கள்.
பல வார்டுகளில் ரூ.2,500-ஐ வாங்கிக் கொண்டு, ரூ.1500-ஐ மட்டும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளித்த இடைத்தரகர்களும் உண்டு. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அளித்ததுதான் புயல் நிவாரணப் பட்டியல். தாங்கள் அளிக்கும் பட்டியலுக்கு காசோலையில் கையொப்பமிடு என்று, தாங்கள் மிரட்டப்பட்டதாகவும் சில அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
இவற்றை எல்லாம் கண்காணிக்க வேண்டிய அமைச்சர்களோ, எப்படியோ போங்கள் என்று வெறுத்து ஒதுங்கிக் கொண்டார்கள். இத்தகைய குளறுபடிகள், மோசடிகள், சுருட்டல்கள் பற்றி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளைக் கொண்டு விசாரித்தால்தான், அரசு தனது நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக