உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
வெள்ளி, ஜனவரி 27, 2012

கடலூர் மாவட்டத்தில் தொழிற்சாலை மாசுகளால் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகம்

கடலூர்:
          
 
          தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது, கடலூர் மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 40 சதவீதம் வரை அதிகமாக இருக்கிறது. 
 
           கடலூர் ரசாயனத் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகளால், சுற்றுச்சூழல் பெரிதும் மாசுபடுவதே இதற்கு முக்கியக் காரணம் என்று, இந்திய மருத்துவச் சங்கம் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டு உள்ளது.  கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் மிகப்பெரிய ரசாயனத் தொழிற்சாலைகள் 20-க்கும் மேல் உள்ளன.  மேற்கத்திய நாடுகளில் தடை செய்யப்பட்ட பல ரசாயனப் பொருள்கள், இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.  இத்தொழிற்சாலைகள் வெளியேற்றும் திட, திரவ, வாயுக் கழிவுகளால் கடலூர் மற்றும் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களின் சுற்றுச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. 
 
          தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும், காற்றில் கலக்கும், சுகாதாரக் கேட்டை விளைவிக்கும், மோசமான ரசாயனங்களால், கடலூரில் சுற்றுச்சூழல் மோசமாகி வருவதாக, சிப்காட் சுற்றுச்சூழல் கண்காணிப்பகம் ஆய்வு நடத்தி, பல ஆண்டுகளாக எச்சரித்து வருகிறது.  மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற நிறுவனமான "நீரி' என்ற அமைப்பு 2007-ல் முறையான ஆய்வு நடத்தி, சிப்காட் பகுதியில் காற்றில் கலந்துள்ள மோசமான ரசாயனங்களால், புற்றுநோயை உருவாக்கும் காரணிகள் 2 ஆயிரம் மடங்கு அதிகரித்து இருப்பதாக, அறிக்கை வெளியிட்டது. 
 
             எனவே இது குறித்து அப்பகுதி மக்களிடையே முறையான மருத்துவ ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரைத்தது.  ஆனால் தொழிற்சாலைகளோ, மத்திய, மாநில அரசுகளோ இப்பரிந்துரைகளைக் கண்டுகொள்ளவில்லை.  புற்றுநோய் அதிகரிக்கும் அபாயமா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று, பெயரளவில் மருத்துவ முகாம்களையும் நடத்தி வந்தன.  அனைவரின் முகத்திரைகளையும் கிழித்தெறிந்து, உண்மையை உலக்குக்கு எடுத்துரைக்கும் வண்ணம் அமைந்து இருந்தது, சனிக்கிழமை இந்திய மருத்துவச் சங்கம் அளித்த அதிர்ச்சித் தகவல்.  
 
            இந்திய மருத்துவச் சங்க மாநிலத் தலைவர் டாக்டர் பிரகாசம், "தானே' புயல் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக சனிக்கிழமை கடலூர் வந்தார். 
 
 இந்நிகழ்ச்சியில் இந்திய மருத்துவச் சங்க கடலூர் செயலர் சந்திரலாதன் கூறியது: 
 
            "தமிழகத்தின் பிற மாவட்டங்களை ஒப்பிடும் வகையில் கடலூர் மாவட்டத்தில் புற்றுநோய் நோய் அதிகரிகத்து வருகிறது.  பிற மாவட்டங்களை விட கடலூரில் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகமாக உள்ளது. இதற்கு சுற்றுச்சூழலை வெகுவாக பாதிக்கும் சிப்காட் ரசாயனத் தொழிற்சாலைகள் வெளியிடும் வாயுக் கழிவுகளே முக்கிய காரணம்.  50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான், புற்றுநோய் பாதிப்பு பெரும்பாலும் காணப்படும். ஆனால் கடலூரில் 25 வயதினரிடையே அதிகம் புற்றுநோய் காணப்படுகிறது. அறுவைச் சிகிச்சைக்காக, புற்றுநோயாளிகள், நாளொன்றுக்கு ஒருவர் வீதம், வருகிறார்கள். 
 
              புற்றுநோயால் 4 கட்டமாக பாதிப்பு ஏற்படுகிறது. அதில் பெரும்பாலான நோயாளிகள் 4-வது கட்டத்தில், குணமாக்க முடியாத நிலையில்தான் மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள்.  காரணம் மக்களிடையே விழிப்புணர்வு இல்லை. பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு உள்ளது.  ரசாயனத் தொழிற்சாலைகளால், புற்றுநோயை உருவாக்கும் மாசுகள் அதிகம் இருப்பதை அரசுக்கு அவ்வப்போது தெரிவித்து வந்து இருக்கிறோம்.  இது குறித்து விரிவான ஆய்வை, இந்திய மருத்துவச் சங்கம் மேற்கொண்டு இருக்கிறது' என்றார் டாக்டர் சந்திரலாதன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior