கடலூர் :
""முதியோர்களை ஆதரிப்பதில் கடலூர் மாவட்டம் முன்மாதிரியாக உள்ளது'' என மாநில மகளிரணி ஆணையத் தலைவர் கூறினார்.
மாநில மகளிர் ஆணையத்தில் கடந்த 2009 முதல் 2011 ஆகிய மூன்று ஆண்டுகளில் பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதான ஆய்வுக் கூட்டம் நேற்று கடலூர் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நடந்தது. மகளிர் ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமை தாங்கினார். கலெக்டர் ராஜேந்திர ரத்னு, எஸ்.பி., பகலவன் முன்னிலை வகித்தனர். சமூக நலத்துறை அலுவலர் புவனேஸ்வரி மற்றும் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் மகளிர் ஆணையத்தில் பெறப்பட்டு நிலுவையில் இருந்த 32 மனுக்கள் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது மனு கொடுத்தவர்கள் மற்றும் அதில் குற்றம் சாட்டப்பட்ட இருதரப்பினரும் அழைத்து விசாரிக்கப்பட்டனர். அதில், போலீஸ் துறையில் நிலுவையில் இருந்த 24 மனுக்களில் 22ம், சமூக நலத்துறையில் நிலுவையில் இருந்த 8 மனுக்களில் நான்கும் தீர்வு காணப்பட்டன. மற்ற 6 மனுக்களின் முகவரி சரியாக இல்லாத காரணத்தினால் நிலுவையில் உள்ளது.
பின்னர் மகளிர் ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி நிருபர்களிடம் கூறியது:
நான் பொறுப்பேற்ற கடந்த 6 மாதத்தில் 9 மாவட்டங்களுக்கு நேரில் சென்று நிலுவை மனுக்கள் மீது ஆய்வு செய்து வருகிறேன். கடலூர் மாவட்டத்தில் நிலுவையில் இருந்த 32 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கலெக்டர், எஸ்.பி., மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயப்பட்டு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் வரதட்சணை தொடர்பான புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தி உடனுக்குடன் தீர்வு கண்டு வருவது பாராட்டுக்குரியது.
நான் இதுவரை ஆய்வு கொண்ட 8 மாவட்டங்களில் இல்லாத வகையில் கடலூர் மாவட்டத்தில் முதியோர்களுக்கு என தனி இல்லம் அமைத்து ஆதரவற்ற முதியவர்களுக்கு மருத்துவம் மற்றும் குடும்பத்திலிருந்து பிரிந்து வந்தவர்களை மீண்டும் அவர்களது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்ந்திட உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. நான் இதுவரை ஆய்வு செய்த மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வரதட்சணைக் கொடுமை அதிகமாக உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மகளிர் ஆணைய தலைவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக