கடலூர் :
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாற்றிட முதல் கட்டமாக அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கலெக்டர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
முன்பெல்லாம் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் கடைக்கு செல்லும் போது துணிப்பை கொண்டு செல்வது வழக்கம். ஆனால், இன்று எண்ணெய் கூட பாலித்தின் கவரில் வாங்கிச் செல்லும் நிலைக்கு மாறிவிட்டது. இவ்வாறு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை வீதிகளில் எறியப்படுகிறது. இவை எளிதில் மக்குவதில்லை. இதனால் மண்ணில் மழை நீர் இறங்குவதை தடை செய்வதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதோடு, மண்ணின் வளமும் குறைந்து வருகிறது. இயற்கை வளத்தை மாசுபடுத்தும் எளிதில் மக்காத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என இயற்கை வள ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுள்ள ராஜேந்திர ரத்னு, மாவட்டத்தில் சுற்றுச் சூழலை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அதனையொட்டி சுற்றுச் சூழலையும், மண் வளத்தையும் பாழ்படுத்தி வரும் மக்கா தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாத மாவட்டமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தத் தடை விதித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார். அதனையொட்டி அனைத்து அரசு அலுவலக வளாகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு நோட்டீஸ் மற்றும் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக பள்ளி, கல்லூரி வளாகங்களிலும், அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கூடும் இடங்களான கோவில், பீச், பஸ் நிலையங்களில் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதற்கு முன்பாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி விட்டு எறிவதால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பை மக்கள் உணரும் வகையில் பள்ளி கல்லூரி மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கலெக்டரின் இந்த அதிரடி நடவடிக்கையை இயற்கை ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டுகின்றனர். மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இல்லாத மாவட்டமாக்கிட கலெக்டர் மேற்கொள்ளும் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் தானாக முன்வந்து ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக