பண்ருட்டி:
பண்ருட்டி திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயில் குடமுழுக்கு ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. சுமார் 1700 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோயிலில், முதன்முதலில் தேவாரம் பாடப்பட்டது, தேர் உருவானது, திருநாவுக்கரசரால் உழவாரப்பணி தொடங்கப்பட்டது போன்ற சிறப்புகளை உடையது.
தமிழக் கோயில்களின் வரலாற்றில் சிறப்பிடத்தைப் பெறுவது திருவிழாக்களே ஆகும். ஆண்டுதோறும் குறிப்பிட்ட தலங்களின் புராணம் மற்றும் வரலாற்று அடிப்படையில் திருவிழாக்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் குடமுழுக்குப் பெருவிழா என்பது எப்போதோ அரியதாக நடைபெறக்கூடிய ஒன்றாகும். சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மற்றும் விஜயநகரம்-நாயக்க மன்னர்கள் இக்கோயிலுக்கு திருப்பணிகள் செய்து கொடைகளும் வழங்கியுள்ளனர். இக்கோயிலில் நடைபெற்றுவந்துள்ள திருப்பணிகள் மற்றும் குடமுழுக்குப் பெருவிழாக்களின் விவரங்களை கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.
இக்கோயில் கல்வெட்டுகளை ஆய்வு செய்து அரிய செய்திகளை கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரன் கூறியது:
ஒவ்வொரு ஊர்களிலும் காணப்படும் விநாயகர் கோயிலைப் போன்று தொன்மையில் சிறிய அளவில் இருந்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் பல்லவர், சேர, சோழ பாண்டியர்களின் ஆட்சிக் காலங்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு இன்று பெரிய கோயிலாகக் காட்சியளிக்கிறது. சிவபெருமான் திரிபுரம் எரித்த புராணம் முதன்முதலில் வேதங்களின் வாயிலாக அறியப்படுகிறது. வீரட்டானத்தின் தோற்றம் சங்ககாலப் புகழுடையதாகும். ஆய்வு நோக்கில் மண்ணாலும், செங்கற்களாலும் கட்டப்பட்டிருந்த இக்கோயிலில் களிமண்ணால் செய்து சுடப்பட்ட சிவலிங்கமும், பொம்மைகளுமே வழிபாட்டில் இருந்தன. பிறகு சுண்ணாம்புக் கலவை மூலம் கோயிலும் சிற்பங்களும் மாற்றியமைக்கப்பட்ட பிறகுதான் கோயிலின் வரலாறு கல்வெட்டுகளின் மூலம் அறியப்படுகிறது. இதுபோன்ற காலகட்டங்களில் கும்பாபிஷேகம் என்கிற குடமுழுக்குப் பெருவிழா இக்கோயிலில் முதன்முதலில் எப்போது நடைபெற்றது என்ற வரலாற்றுச் செய்தி இன்று வரை கிடைக்கவில்லை. இவ்வழக்கம் உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஏற்பட்டிருக்கலாம்.
கி.பி.8-ம் நூற்றாண்டு முதல்தான் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. முதல் கல்வெட்டு பல்லவ மன்னன் பரமேசுவரவர்ம பல்லவனுடைய கொடைகள் பற்றிக் கூறுகிறது. அடுத்து ஆட்சிப் பொறுப்பேற்ற நந்திவர்ம பல்லவரின் கி.பி. 850-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும், நந்தா விளக்கு மற்றும் 100 கழஞ்சுப் பொற்காசுகளின் கொடை பற்றியே கூறுகிறது. இவரையடுத்து அரசாண்ட நிருபதுங்கவர்ம பல்லவரின் கல்வெட்டுதான் முதன்முதலில் திருப்பணி செய்து குடமுழுக்கு நடைபெற்றதைத் தெரிவிக்கிறது. இவனது ஆட்சிக்காலத்தின் திருமுனைப்பாடி நாட்டின் குறுநில மன்னராக இருந்து திருநாவலூரை மையமாகக் கொண்டு அரசாட்சி செய்த நரசிங்க முனையரையர் மகன் முனையர்கோன் இளவரசனால் திருவதிகை வீரட்டானம் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
இதன் பிறகு அரசாண்ட சோழர், பாண்டியர் ஆட்சிக் காலக் கல்வெட்டுகளில் குடமுழுக்குப் பற்றிய செய்திகள் காணப்படவில்லை. ஆனால் மிக அதிசயமாக திருப்பணி மற்றும் குடமுழுக்கு செய்யப்பட்ட செய்தியை ஒரே ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது. சேரமன்னன் வீரகேரள ரவிவர்ம குலசேகரன் தமிழகத்தின் மீது படையெடுத்து வெற்றி பெற்று இரண்டு ஆண்டுகள் மட்டுமே இவனது ஆதிக்கம் தமிழகத்தில் இருந்த நிலையில் கி.பி.1313-ம் ஆண்டில் திருவதிகை வீரட்டானத்தை முழுமையாகத் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்தினான் என்று இக்கல்வெட்டு கூறுகிறது. வீரட்டானத் திருக்கோயிலின் அறங்காவலர் குழுத் தலைவராக ராசதுரை இருந்தபோது ஐயப்ப சுவாமிகள் பெருமுயற்சியால் 19.8.1994-ம் நாளில் குடமுழுக்கு நடந்துள்ளது.
இப்போது நந்தன ஆண்டு வைகாசி 19-ம் தேதி இந்து சமய அறநிலைத் துறையின் ஆதரவோடு பண்ருட்டி நகர்மன்றத் தலைவர் ப.பன்னீர்செல்வம் அவர்களின் பெருமுயற்சியால் சாதி, சமய, அரசியல் சார்பற்று அனைத்துத் தரப்பினராலும் போற்றத்தக்க வகையில் வீரட்டானம் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற உள்ளது. இது 21-ம் நூற்றாண்டில் வரலாற்றில் பதிக்கப்படும் இணையற்ற நிகழ்வாகும் என கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக