உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புவனகிரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புவனகிரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மார்ச் 01, 2012

புவனகிரி அருகே நள்ளிரவில் தாலி செயினை பறித்த கொள்ளையனை மண்வெட்டியால் வெட்டி பிடித்த பெண்













           கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள பி.உடையூர் கிராமத்தை சேர்ந்தவர், தாமோதரன் (வயது 40). இவர் தனது வீட்டு முன்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜலட்சுமி (35). நேற்று முன்தினம் தாமோதரன் வியாபாரத்தை முடித்து விட்டு மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு சென்று விட்டார்.

           வீட்டில் அவருடைய மனைவி ராஜலட்சுமி, மகள்கள் ஜெயப்பிரியா (20), சிவரஞ்சினி (18) ஆகிய 3 பேரும் இருந்தனர். சிவரஞ்சனி, சிதம்பரம் பெண்கள் மேல் நிலைப்பளிளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த ஆண்டு திருமணம் நடந்த ஜெயப்பிரியா, பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்திருக்கிறார். 3 பேரும் இரவில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில், கொள்ளையர்கள் 2 பேர், வீட்டின் மாடிப்படி வழியாக பக்கவாட்டு கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

          கொள்ளையர்களில் ஒருவன், ராஜலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 71/2 பவுன் தாலி செயினையும், மற்றொருவன் காதில் கிடந்த தோட்டையும் இழுத்தனர். திடுக்கிட்டு விழித்த ராஜலட்சுமி தாலி சங்கிலியை கையால் பிடித்துக் கொண்டு சத்தம் போட்டார். தாயாரின் சத்தம் கேட்டு விழித்த மாணவி சிவரஞ்சனி மின் விளக்கை எரியவிட்டார். உடனே கொள்ளையர்கள் சிவரஞ்சனியை கீழே தள்ளி மானபங்கம் செய்ய முயன்றனர். சுதாரித்து எழுந்த ராஜலட்சுமி கொள்ளையர்களை பிடித்து தள்ளினார். ராஜலட்சுமியையும் மானபங்கம் செய்ய முயன்ற அவர்கள், சத்தம் போட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டினார்கள்.

           அப்போது சமயோசிதமாக செயல்பட்ட மாணவி சிவரஞ்சனி, கொள்ளையன் ஒருவனின் முகத்தில் ஒரு துண்டைப் போட்டு மூடி கழுத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டார். இதனால் அவனால் தப்பி ஓட முடியவில்லை. சத்தம் கேட்டதும் பக்கத்து வீட்டில் வசித்த சிவரஞ்சனியின் பெரியப்பா மகன் மோகன், அருண்குமார் மற்றும் சிலர் ராஜலட்சுமியின் வீட்டிற்கு வந்தனர். கதவு உள்புறமாக தாளிடப்பட்டு இருந்ததால், அவர்களால் உடனடியாக உள்ளே செல்ல முடியாமல் கொள்ளையர்களை எச்சரித்து சத்தம் போட்டனர். உடனே தாலி செயினை மட்டும் பறித்துக் கொண்ட கொள்ளையன் வெளியே தப்பி ஓடினான். மற்றொருவனும் அவனுடன் ஓட முயன்றபோது ராஜலட்சுமி, கபடி வீராங்கனை போல் அவனுடைய காலை இறுகப் பிடித்துக் கொண்டதால் அவனால் தப்ப முடியவில்லை.

           இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கொள்ளையன், கீழே கிடந்த அரிவாளை எடுத்து ராஜலட்சுமியை வெட்டுவதற்காக ஓங்கினான். இருப்பினும் அஞ்சாமல் போராடிய ராஜலட்சுமி கால் பிடியை விட்டு விட்டு அவனை அந்த அறைக்குள் வைத்து பூட்ட முயன்றார். அப்போது கொள்ளையன் மீண்டும் அவரை வெட்ட முயன்றார். உடனே சிவரஞ்சனி மீண்டும் கொள்ளையனுடைய கழுத்தை இறுகப்பிடித்துக் கொண்டு அவனால் தாக்க முடியாமல் தடுத்துவிட்டார். அந்த நேரத்தில் தனது உயிரை துச்சமென கருதிய ராஜலட்சுமி அருகில் கிடந்த மண் வெட்டியை எடுத்து அவனை வெட்டினார்.

           சட்டென்று அவன் கீழே குனிந்ததால் கொள்ளையனின் தலையில் மண் வெட்டி வெட்டு விழுந்து ரத்தம் சொட்டச் சொட்ட கீழே விழுந்தான். அவனை தாயும் மகளும் பிடிப்பதற்குள் சுதாரித்து எழுந்த கொள்ளையன் வெளியே ஓட முயன்றபோது வீட்டின் நிலைப்படியில் மோதி தலையில் அடிபட்டு மீண்டும் கீழே விழுந்தான் உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்களுடன் சேர்ந்து தாயும் மகளும் கொள்ளையனை மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். புவனகிரி போலீசார் கொள்ளையனை கைது செய்து சிகிச்சைக்காக அவனை சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக கடலூர் ஆஸ்பத்திரிக்கு அவன் மாற்றப்பட்டான்.

போலீசார் நடத்திய விசாரணையில் வீட்டினுள் புகுந்து சிக்கிக் கொண்ட கொள்ளையன், நாகை மாவட்டம் சீர்காழி மணல்மேடு கிராமத்தை சேர்ந்த மணி என்பவரது மகன் முருகன் (வயது 41) என்று தெரிய வந்தது.
அவனுடன் வந்து தாலி செயினுடன் தப்பி ஓடிய மற்றொரு கொள்ளையன், தஞ்சை மாவட்டம் திருவைபாடி கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் அருள் என்று தெரிய வந்தது. இருவரும் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பழைய குற்றவாளிகள் ஆவர்.  வீடு புகுந்து தாலி செயினை பறிப்பதற்கு முன்பு வீட்டின் முன்புறம் உள்ள மளிகைக் கடைக்குள் இருந்த ரூ.10 ஆயிரத்தையும் அவர்கள் திருடி உள்ளனர்.

      தப்பி ஓடிய அருளை பிடிப்பதற்கு தனி போலீஸ் படை அமைக்கப்பட்டு உள்ளது.
கொள்ளையர்களுடன் துணிச்சலாக போராடியதுடன், மண் வெட்டியால் வெட்டிச்சாய்த்து கொள்ளையன் ஒருவனை மடக்கிப் பிடித்த ராஜலட்சுமியையும் அவருடைய மகள் சிவரஞ்சனியையும் பாராட்டி, வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சைலேந்திரபாபு அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.



Read more »

செவ்வாய், பிப்ரவரி 21, 2012

புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பிட வசதியின்றி மாணவிகள் அவதி

புவனகிரி :
     
        புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளின் எண்ணிக்கைக்கேற்ப கழிப்பிட வசதி செய்து கொடுக்கப்படாததால் மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
      புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நகரின் மைய பகுதியில் அமைந்துள்ளது. இப்பள்ளியில் புவனகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்து 700 மாணவிகள் படித்து வருகின்றனர். 35க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர்.

        இவர்களுக்கு போதுமான கழிப்பிட வசதிகள் இருந்தும் அவை சரியான முறையில் பராமரிக்கப்படாததால் மதிய வேளையில் மாணவிகள் கழிப்பிடம் வேண்டி அருகிலுள்ள வெள்ளாற்றிற்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.  மேலும், பள்ளிக்கு வரும் மாணவிகள் தங்களது இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே அர” பள்ளி கழிப்பிடத்தை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Read more »

வெள்ளி, நவம்பர் 11, 2011

புவனகிரியில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா: 176 குடும்பங்களுக்கு அமைச்சர் செல்வி ராமஜெயம் வழங்கினார்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/8d4ecb03-ca97-405a-a1ec-380fd0925712_S_secvpf.gif

புவனகிரி:

          கடலூர் மாவட்டம் மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியம் அழிக்சிக்குடி ஊராட்சியை சேர்ந்த வண்டுராயன்பட்டு கிராமத்தில் தமிழக அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அமுதவல்லி தலைமை தாங்கினார்.

            சிதம்பரம் ஆர்.டி.ஓ. இந்துமதி, தாசில்தார் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அழிச்சிக்குடி ஊராட்சி மன்ற தலைவர்டி கவிதா பாரி வரவேற்று பேசினார்.   விழாவில் சிறப்பு விருந்தினராக சமூகநலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் கலந்து கொண்டு 176 குடும்பங்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவற்றை வழங்கினார்.

              விழாவில் ஒன்றியக்குழு தலைவர்கள் கீதா, ஜெயபாலன், அசோகன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் சிவப்பிரகாசம், புவனகிரி பேரூராட்சி மன்ற தலைவர் வள்ளி சச்சிதானந்தம், புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயபால், கலையரசி, புவனகிரி தொகுதி செயலாளர் கருப்பன், இணை செயலாளர் லட்சுமி நாராயணன், புவனகிரி நகர அவைத்தலைவர் கனகராஜ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணை தலைவர் லெனின், ஒன்றிய இளைஞரணி செயலாளர் செழியன்,

           ஒன்றிய ஜெயலலிதா பேரவை சீனுவாசன், அமைச்சரின் உதவியாளர் ஜெயசீலன், வண்டுராயன் பட்டு ஊராட்சி செயலாளர் ரகுநாதன், கிளை செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் வருவாய் அதிகாரிகள், ஊராட்சி மன்ற துணை தலைவர் உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். கடலூர் மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 720 பயனாளிகளுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டு உள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

வெள்ளி, ஜூலை 29, 2011

புவனகிரியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம்: சமூகநலத்துறை அமைச்சர் செல்விராமஜெயம் திறந்து வைக்கிறார்

சிதம்பரம:

            சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் சனிக்கிழமை (30-ம் தேதி) காலை 11 மணிக்கு திறக்கப்படுகிறது.  

             புதிய ஏ.டி.எம். மையத்தை புவனகிரி சட்டமன்ற உறுப்பினரும், சமூகநலத்துறை அமைச்சருமான செல்விராமஜெயம் திறந்து வைக்கிறார் என சிதம்பரம் கிளை முதன்மை மேலாளர் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார். பொதுமக்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் வேண்டுகோளின் ஏற்று பாரத ஸ்டேட் வங்கி புவனகிரியில் இந்த ஏ.டி.எம். மையத்தை திறக்கவுள்ளது. இதன்மூலம் இந்த பகுதி மக்களுக்கு 24 மணி நேரமும் வங்கி சேவை கிடைக்கும்.





Read more »

புதன், பிப்ரவரி 09, 2011

நெய்வேலியில் தரமில்லாமல் போடப்படும் சிறப்புச் சாலைகள்?

நெய்வேலி:
 
              நெய்வேலியை அடுத்த கெங்கைகொண்டான் பேரூராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகரில் சாலை போடுவதற்கான எவ்வித வரையறைகளையும் பின்பற்றாமல், தரம் குறைந்த சாலைகள் அமைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

             நெய்வேலியை அடுத்த கெங்கைகொண்டான் பேரூராட்சிக்குட்பட்ட பாலாஜி நகரில் 12-வது தெருவில், மாநில சிறப்புச் சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது.இந்த சாலையை புவனகிரியைச் சேர்ந்த, ஒப்பந்ததாரர் ஒருவர் டென்டர் எடுத்து செய்து வருகிறார். 

               சாலை அமைப்பதற்காக நெடுஞ்சாலைத் துறை பரிந்துரை செய்துள்ள எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் தரமற்ற சாலைகள் போடுப்படுவதாகவும், சாலை போடுவதற்கு முன் அப்பகுதியில் அடித்தளத்தில் மணல் நிரப்பி, அதன் மீது கருங்கல் ஜல்லிகளுடன் சிமென்ட் கலந்தும், சாலையின் விளிம்புப் பகுதியில் கனமான கான்கிரீட்டாலான சிறிய தடுப்புச் சுவர் எழுப்பி அதன்பின்னர் சாலை அமைக்க வேண்டும் என சாலை அமைப்பதற்கான விதிமுறைகள் உள்ள நிலையில், அந்த விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல், இருபுறமும் செங்கற்களை அடுக்கி, மணலுக்குப் பதிலாக களிமண்ணை நிரப்பி அதன்மீது கலவை கொட்டப்பட்டு சாலை அமைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

            மேலும் சாலையின் இருபுறமும் வடிகால் வசதி ஏற்படுத்தாமல் சாலை அமைக்கப்படுவதால், மழைக்காலத்தில் மழைநீர் வீடுகளில் புகும் நிலை ஏற்படும் என மூத்தக் குடிமக்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.மேலும் சாலையின் மேற்பரப்பில் போடப்படும் கான்கிரீட்டின் மொத்த கனஅளவும், நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் குறைவாக போடப்படுவதாகவும், 

இதுகுறித்து சிறப்புச் சாலைகள் திட்ட ஆய்வாளர் கூறியது 

                 அவர் இதுவரை சாலை அமைப்புப் பணிகளை பார்வையிடவும் வரவில்லை என்கின்றனர் குடியிருப்புவாசிகள்.

தரமில்லாத சாலைகள் போடுவது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கே.குப்புசாமியை கூறியது  

              "அவர் தனக்கு அண்ணாமலை நகர், கெங்கைகொண்டான், பெண்ணாடம் பேரூராட்சிகளின் பொறுப்பு செயல் அலுவலராக இருப்பதால் பிறகு பதில் சொல்கிறேன்' என்று கூறினார். மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்காக போடப்படும் சாலைகள் தரமானதாகவும், முறையாகவும் அமைந்தால் தானே அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் மீண்டும் அவர்கள் முகத்தில் விழிக்க முடியும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Read more »

ஞாயிறு, நவம்பர் 28, 2010

கடலூரில் 50 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிர்கள் மூழ்கின


கடலூர் சிப்காட் அருகே நடுத்திட்டு கிராமத்தில் உப்பனாற்றின் கரையில் ஏற்பட்டுள்ள உடைப்பு.
கடலூர்:
 
             கடலூர் மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிர்கள் தண்ணிரில் மூழ்கி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
 
            கடலூர் மாவட்டத்தில் சுமார் 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் நடவு செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நாற்று நட்டு, 20 நாளுக்குள் உள்ளன. கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகள், வாலாஜா, பெருமாள் ஏரி பாசனப் பகுதிகள், பரவனாற்றின் கரைகள், புவனகிரி, பரங்கிப்பேட்டை வட்டாரங்களில்  வெள்ளாற்றின் கரையோரப் பகுதிகள் உள்ளிட்டவற்றில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
 
          வெள்ளியங்கால ஓடையில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு இருப்பதாலும், மணவாய்க்காலில் வெள்ளம் அதிகரித்து இருப்பதாலும் சிறகிழந்த நல்லூர், எடையார், திருநாரையூர், மேலவன்னியூர், வீரநத்தம் உள்ளிட்ட 15 கிராமங்களில் வெள்ளம் புகுந்து, நட்டு 2 மாதங்கள் ஆன நெல் பயிர்கள், தண்ணீரில் மூழ்கி இருப்பதாகவும், வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும் கொள்ளிடம் கீழணைப் பாசன விவசாயிகள் சங்கச் செயலாளர் விநாயகமூர்த்தி தெரிவித்தார்.
 
               வெள்ளாற்றில் பெருமளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மடுவங்கரை, நஞ்சை மகத்து வாழ்க்கை, வானம்பாடி, கீழ்அணுவம்பட்டு, சி.முட்லூர், கீழமூங்கிலடி உள்ளிட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நெல் பயிர்கள் மூழ்கிக் கிடக்கின்றன.÷1,800 கன அடி நீர் செல்லும் திறன் கொண்ட பாசிமுத்தான் ஓடையில், 2100 கனஅடி உபரிநீர் வழிந்து சென்று கொண்டு இருப்பதாகவும் பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் ரவீந்திரன் தெரிவித்தார்.
 
           என்எல்சி சுரங்கங்களில் இருந்து அபரிமிதமான நீர் வெளியேற்றப் படுவதாலும், பரவனாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்காலும், வடலூரை அடுத்த மறுவாய் அருகே சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பண்ருட்டி- கும்பகோணம் சாலை துண்டிக்கப்பட்டது.÷மணிமுக்தா நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், விருத்தாசலம்- சேலம் சாலையில் பெருளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் விருத்தாசலம்- சேலம் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
             நந்திமங்கலம், நாச்சியார் பேட்டை, அகரப்புத்தூர் பகுதிகளில் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. கடலூரில் கெடிலம் ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோரப் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. கூத்தப்பாக்கம், புருஷோத்தமன் நகர், பாதிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும், முதுநகர் ஏணிக்காரன் தோட்டம், பீமாராவ் நகர், வண்டிப் பாளையம், கண்ணகி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளுக்குள் 3 உயரத்துக்கு மேல் தண்ணீர் தேங்கி உள்ளது.
 
                 கண்ணகி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வடிகால் வசதியின்றி, வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால், பாதிக்கப்பட்ட மக்கள், வண்டிப்பாளையம் சாலையில் சனிக்கிழமை  காலை, மறியலில் ஈடுபட்டனர்.கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு மற்றும் நகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சு நடத்தி கலைந்து போகச் செய்தனர். தேங்கி நிற்கும் நீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
 
                    பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், கடலூர்- தாழங்குடா தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் கடலூர்- தாழங்குடா இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. விருத்தாசலம்- ஸ்ரீமுஷ்ணம் சாலை, விருத்தாசலம்- வேப்பூர் சாலை துண்டிக்கப்பட்டுள்ளன.  பெண்ணாடம் அருகே முருகன்குடி- திருமங்கலம் சாலை வெள்ளப் பெருக்கால் துண்டிக்கப்பட்டது. ஆலடி பாலக்கொல்லை உள்ளிட்ட கிராமங்களில் 100 ஏக்கரில் விதைக்கப்பட்டு இருந்த மணிலா, உளுந்து சேதம் அடைந்து விட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior