உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ரேஷன் அரிசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரேஷன் அரிசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஆகஸ்ட் 06, 2011

கடலூரில் இருந்து ரேஷன் அரிசி கடத்தல்: ஒருவர் கைது

கடலூரில் இருந்து கடத்தப்பட்டு புதுவை மாநிலம் சேலியமேடு கிராமத்தில் கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்.
கடலூர்:
         தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு, புதுவை மாநிலத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த, 145 டன் ரேஷன் அரிசியை தமிழகப் போலீசார்  வெள்ளிக்கிழமை கைப்பற்றினர்.  கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் இருந்து, ரேஷன் அரிசி பெருமளவுக்குக் கடத்தப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் அரிசியை புதுவையைச் சேர்ந்த கள்ளத்தனமாக அரிசி வியாபாரம் செய்யும் நபர்கள் வாங்கி, அங்குள்ள அரிசி ஆலைகளில் நன்றாக பாலிஷ் செய்து, கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் விற்பனை செய்து விடுகின்றனர். 

            இந்த அரிசி சந்தையில் கிலோ ரூ. 15-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.   அண்மையில் கடலூரில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு, புதுவை மாநிலம் பாகூரில் பதுக்கி வைத்து  இருந்த 48 டன் ரேஷன் அரிசியை கடலூர் மாவட்ட உணவு குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார்    கைப்பற்றினர். இக்கடத்தலில் தொடர்பு உள்ள பாகூர் அப்பு என்ற இதயத்துல்லா உள்ளிட்ட, 10-க்கும் மேற்பட்டவர்களைப் போலீஸôர் கைது செய்தனர்.  

           தொடர்ந்து போலீஸôர் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.  இந்நிலையில் புதுவை மாநிலம் சேலியமேடு கிராமத்தில் உள்ள அரிசி ஆலை சேமிப்புக் கிடங்கை வெள்ளிக்கிழமை கடலூர் மாவட்ட உணவு குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரகுமார், ஆய்வாளர் முருகன், உதவி ஆய்வாளர் பாஸ்கரன், சிறப்புப் படை ஆய்வாளர் அம்பேத்கர் உள்ளிட்ட போலீஸôர் சோதனையிட்டனர்.  

          சோதனையில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 145 டன் ரேஷன் அரிசியை போலீசார் ரேஷன் கைப்பற்றினர்.  இந்த ரேஷன் அரிசி, விற்பனைக்குக் கொண்டு செல்லத் தயாராக வைக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.  இது தொடர்பாக சேலியமேடு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணனின் மகன் நந்தகோபனை (56) போலீசார் கைது செய்தனர். மேலும் பலரைப் போலீஸôர் தேடிவருகிறார்கள்.



Read more »

திங்கள், ஜூலை 18, 2011

தமிழ்நாட்டில் இலவச அரிசி திட்டம்: கோவில் அன்னதானத்துக்கு வரும் பக்தர்கள் குறைவு

           தமிழ்நாட்டில் ஜெயலலிதா 3-வது முறையாக கடந்த மே மாதம் 16-ந் தேதி பதவி ஏற்றார். தமிழக மக்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டத்தில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா முதல் கையெழுத்திட்டார். அதன்படி தமிழகம் முழுவதும் 20 கிலோ அரிசி ரேஷன் கடை மூலம் வழங்கப்படுகிறது.

           தமிழ்நாட்டில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மதிய நேரம் உணவுக்காக எங்கும் அலையக்கூடாது என்பதற்காக மதிய நேரம் உணவு கோவில்களில் வழங்க கடந்த 2002-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா உத்தரவிட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

           அதே சமயம் தமிழ்நாட்டில் இலவச அரிசி வழங்குவதால் கோவில்களில் வழங்கப்படும் மதிய உணவு சாப்பிட பக்தர்கள் கூட்டம் குறைந்தது. அனைவருக்கும் இலவச அரிசி கிடைப்பதால் கூட்டம் குறைவாக வருகிறது என பக்தர்களில் ஒருவர் தெரிவித்தார். 

Read more »

வியாழன், பிப்ரவரி 10, 2011

ஏற்றுமதிக்கு தடை: கடலூர் மாவட்டத்தில் அரிசி விலை குறைகிறது

கடலூர்:

                கடலூர் மாவட்டத்தில் அரிசி விலை குறையத் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்படுகிறது.  

            கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தன. தற்போது சம்பா நெல் அறுவடை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நெல் கொள்முதல் விலை முந்தைய ஆண்டுகளைவிட பெருமளவுக்கு வீழ்ச்சி அடைந்து உள்ளது, விவசாயிகளைக் கவலையில் ஆழ்த்தி வருகிறது. தமிழகத்தில் சம்பா பருவத்தில், பொன்னி, வெள்ளைப் பொன்னி, குள்ளப் பொன்னி, பிபிடி, ஏடிடி 38 உள்ளிட்ட சன்னரக நெல் பெருவாரியாக பயிரிடப்படுகிறது. 

             ஆனாலும் நகரப்புறங்களில் இந்த சன்னரக அரிசி ரகங்களைப் பெரும்பாலும் சாப்பாட்டுக்குப் பயன்படுத்துவது இல்லை. கர்நாடகா பொன்னி புழுங்கல், ஆந்திரா பொன்னி பச்சரிசி ரகங்களே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.ஒரு மாதத்துக்கு முன் கர்நாடகா பொன்னி விலை தமிழகத்தில் கிலோ ரூ. 30 முதல் ரூ. 38 வரை விற்பனை செய்யப்பட்டது.  கடலூர் மாவட்டத்தில் கர்நாடகா பொன்னி கிலோ ரூ. 30 முதல் ரூ. 32 வரை விறபனை செய்யப்பட்டு வந்தது.ஆண்டுதோறும் பொதுவாக ஜனவரி மாதத்தில் அறுவடைக்குப்பின் அரிசி விலை குறையும் வாய்ப்பு உண்டு. 

             ஆனால் இந்த ஆண்டு நெல் விலை பெருமளவு குறைந்த போதிலும், கடந்த 10 நாளுக்கு முன்பு வரை அரிசி விலை குறையாமல் இருந்து வந்தது.ஆனால் தற்போது அரிசி விலை கொஞ்சம் குறையத் தொடங்கி இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் ஒரு மாதத்துக்கு முன், கர்நாடகா பொன்னி விலை கிலோ ரூ. 30 ஆக இருந்தது. தற்போது ரூ. 26 ஆகக் குறைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் அதிசயப் பொன்னி கிலோ ரூ. 26 ஆக இருந்தது ரூ. 22 ஆகவும், பிபிடி பொன்னி கிலோ ரூ. 28 ஆக இருந்தது ரூ. 23 ஆகவும், பொன்மணி கிலோ ரூ. 22 ஆக இருந்தது ரூ. 20 ஆகவும் குறைந்து இருப்பதாகவும் அரிசி வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.

காரணம் என்ன? 

                   அரிசி ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்து இருப்பதால் கர்நாடகம், ஆந்திரம் மாநிலங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி குறைந்துவிட்டதால், தமிழகத்தில் அரிசி விலை குறைந்து வருவதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர். ஆந்திராவில் அரிசி ஆலைகள் மிக நவீன முறையில் அரிசி அரவை செய்கின்றன. நல்ல வெண்மையாகவும், உடைசல் இல்லாமலும் அங்குள்ள ஆலைகள் உற்பத்தி செய்கின்றன.ஆனால் தமிழகத்தில் அரிசி ஆலைகள் அந்த அளவுக்கு இன்னமும் நவீனமாகவில்லை. 

             மேலும் நெல் அரவைக்குப் பயன்படுத்தும் தண்ணீரைப் பொறுத்தும் அரிசியின் நிறம் மாறி விடுகிறது.இதனால்தான் கர்நாடகா பொன்னியை தமிழகத்து நகர்ப்புற மக்கள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். ஆந்திரம், கர்நாடகம் மாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு நாளொன்றுக்கு, 200 லாரிகள் கர்நாடகா பொன்னி புழுங்கல் மற்றும் ஆந்திரா பொன்னி பச்சை அரிசி இறக்குமதி செய்யப்படுவதாகவும், கடலூர் மாவட்டத்துக்கு நாளொன்றுக்கு 10 டன் அரிசி வருவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.

Read more »

செவ்வாய், ஜனவரி 04, 2011

கடலூரில் 40 மூட்டை ரேஷன் அரிசி கடத்தல் லாரி பறிமுதல்: 2 பேருக்கு வலை



கடலூர் : 

           குள்ளஞ்சாவடியிலிருந்து கடத்தப்பட்ட 40 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் கைப்பற்றியினர், மினி லாரியை பறிமுதல் செய்தனர். 

           கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியிலிருந்து, வடலூர் நோக்கி மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. குள்ளஞ்சாவடிலியிருந்து அரிசி கடத்திச் சென்ற லாரியை விரட்டிச் சென்று குறிஞ்சிப்பாடி புறவழிச்சாலையில் மடக்கிப் பிடித்தனர். 

           லாரியில் இருந்த இரண்டு பேர் தப்பியோடி விட்டனர். லாரியை சோதனை செய்ததில் 40 மூட்டை ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. கடலூர் உணவு கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து லாரியை பறிமுதல் செய்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட 40மூட்டை ரேஷன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் ஒப்படைத்தனர்.

Read more »

சனி, டிசம்பர் 11, 2010

கடலூர் முதுநகரில் ரோட்டில் ரேஷன் அரிசியை கொட்டி போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு




கடலூர் : 

               கடலூர் முதுநகரில் மழை நிவாரணமாக 10 ரூபாய்க்கு ரேஷன் அரிசி கொடுத்ததால் ஆத்திரமடைந்து அரிசியை ரோட்டில் கொட்டி எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

                கடலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கன மழையால் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்தது. முதுநகரில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசியை ரேஷன் கடையில் வாங்கிக் கொள்ளுமாறு கடந்த 4ம் தேதி ஆளுங்கட்சி பிரமுகர்கள் சிலர் டோக்கன் கொடுத்தனர்.

                இதை வாங்கிய மக்கள், இருசப்ப செட்டித் தெருவில் உள்ள 2ம் எண் ரேஷன் கடைக்குச் சென்று டோக்கனை கொடுத்து அரிசி கேட்டனர். ரேஷன் கடைக்காரர், 10 கிலோ ரேஷன் அரிசியை கொடுத்து விட்டு, ரேஷன் கார்டில் இன்னும் 10 கிலோ அரிசி மட்டுமே வாங்க முடியும் எனக் கூறினார் .ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும் 20 கிலோ ரேஷன் அரிசியில் 10 கிலோவிற்கான 10 ரூபாயை ஆளுங்கட்சியினர் ரேஷன் கடையில் கொடுத்திருப்பது தெரிந்தது.

              மழை நிவாரணமாக வெறும் 10 ரூபாயை மக்களிடம் நேரடியாக கொடுக்க முடியாது என்பதால், ஆளுங்கட்சியினர் தந்திரமாக ரேஷன் கடையில் கொடுத்திருப்பதை அறிந்து ஆத்திரமடைந்த மக்கள், மழை நிவாரணம் வெறும் 10 ரூபாய் மட்டும் தானா எனக் கேட்டு தாங்கள் வாங்கிய ரேஷன் அரிசியை ரோட்டில் கொட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தினமலரில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. 

                அரசு மானிய விலையில் மக்களுக்கு வழங்கும் அரிசியை, ஆளுங்கட்சியினர் சிலர் மழை நிவாரணமாக வழங்குவதை அறிந்த கலெக்டர், ரேஷன் அரிசியை கார்டுதாரர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும், மொத்தமாகவோ, டோக்கன் முறையிலோ வழங்கக் கூடாது என்றும், அவ்வாறு முறைகேடு நடந்தால் ரேஷன் கடை விற்பனையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், கடலூர் முதுநகரில் ரேஷன் அரிசியை நிவாரணமாக வழங்கியவர்கள் மீது போலீசில் புகார் செய்ய உத்தரவிட்டார்.

                 இந்நிலையில், அரசு மானிய விலையில் அரிசி வழங்கும் திட்டத்தை அடையாளம் தெரியாத சிலர் அவமதித்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், கடந்த 8ம் தேதி இரவு கடலூர் வட்டார குடிமைப் பொருள் பிரிவு ஆய்வாளர் மாணிக்கம், கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து, ரேஷன் அரிசியை ரோட்டில் கொட்டி அவமதித்த அடையாளம் தெரியாத ஆண் மற்றும் சில பெண்களை தேடிவருகின்றனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசியை தவறுதலாக பயன்படுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

கடலூர் : 

            ரேஷன் அரிசியை தவறுதலாக பயன்படுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
 
இதுகுறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

              கடலூர் மாவட்டத்தில் ரேஷன் கடையில் உள்ள பொது வினியோகத் திட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு சமைத்து வழங்குவதற்காக அரிசி வழங்குமாறு மாவட்ட நிர்வாகத்தால் உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிலர் பொது வினியோகத் திட்ட அரிசியை தவறுதலாக சிலருக்கு டோக்கன் கொடுத்து நியாய விலைக் கடைகளில் பெற்றுச் செல்வதாக செய்திகள் வந்துள்ளன.
 
              இது தொடர்பாக எந்த விதமான ஆணையும் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படவில்லை. பொதுவினியோகத் திட்ட அரிசியை அனுமதிக்கப்பட்ட முறைகளினால் அன்றி வேறு வகைகளில் பயன்படுத்துவோர் மீது காவல் நிலையத்தில் புகார் செய்து குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும்.மேலும் ஏழைகளுக்காக வினியோகம் செய்யப்படும் அரிசியை ரோட்டில் கொட்டி அலட்சியப்படுத்தியதும் ஏற்புடையதன்று. எனவே கடலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பொது வினியோகத் திட்ட அரிசியை எக்காரணத்தைக் கொண்டும் வேறு காரணங்களுக்காக விற்பனை செய்யக்கூடாது.  இனி வரும் காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior