கடலூர் :
ரேஷன் அரிசியை தவறுதலாக பயன்படுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் ரேஷன் கடையில் உள்ள பொது வினியோகத் திட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு சமைத்து வழங்குவதற்காக அரிசி வழங்குமாறு மாவட்ட நிர்வாகத்தால் உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிலர் பொது வினியோகத் திட்ட அரிசியை தவறுதலாக சிலருக்கு டோக்கன் கொடுத்து நியாய விலைக் கடைகளில் பெற்றுச் செல்வதாக செய்திகள் வந்துள்ளன.
இது தொடர்பாக எந்த விதமான ஆணையும் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படவில்லை. பொதுவினியோகத் திட்ட அரிசியை அனுமதிக்கப்பட்ட முறைகளினால் அன்றி வேறு வகைகளில் பயன்படுத்துவோர் மீது காவல் நிலையத்தில் புகார் செய்து குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும்.மேலும் ஏழைகளுக்காக வினியோகம் செய்யப்படும் அரிசியை ரோட்டில் கொட்டி அலட்சியப்படுத்தியதும் ஏற்புடையதன்று. எனவே கடலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பொது வினியோகத் திட்ட அரிசியை எக்காரணத்தைக் கொண்டும் வேறு காரணங்களுக்காக விற்பனை செய்யக்கூடாது. இனி வரும் காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக