உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
வியாழன், பிப்ரவரி 10, 2011

ஏற்றுமதிக்கு தடை: கடலூர் மாவட்டத்தில் அரிசி விலை குறைகிறது

கடலூர்:

                கடலூர் மாவட்டத்தில் அரிசி விலை குறையத் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்படுகிறது.  

            கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தன. தற்போது சம்பா நெல் அறுவடை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நெல் கொள்முதல் விலை முந்தைய ஆண்டுகளைவிட பெருமளவுக்கு வீழ்ச்சி அடைந்து உள்ளது, விவசாயிகளைக் கவலையில் ஆழ்த்தி வருகிறது. தமிழகத்தில் சம்பா பருவத்தில், பொன்னி, வெள்ளைப் பொன்னி, குள்ளப் பொன்னி, பிபிடி, ஏடிடி 38 உள்ளிட்ட சன்னரக நெல் பெருவாரியாக பயிரிடப்படுகிறது. 

             ஆனாலும் நகரப்புறங்களில் இந்த சன்னரக அரிசி ரகங்களைப் பெரும்பாலும் சாப்பாட்டுக்குப் பயன்படுத்துவது இல்லை. கர்நாடகா பொன்னி புழுங்கல், ஆந்திரா பொன்னி பச்சரிசி ரகங்களே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.ஒரு மாதத்துக்கு முன் கர்நாடகா பொன்னி விலை தமிழகத்தில் கிலோ ரூ. 30 முதல் ரூ. 38 வரை விற்பனை செய்யப்பட்டது.  கடலூர் மாவட்டத்தில் கர்நாடகா பொன்னி கிலோ ரூ. 30 முதல் ரூ. 32 வரை விறபனை செய்யப்பட்டு வந்தது.ஆண்டுதோறும் பொதுவாக ஜனவரி மாதத்தில் அறுவடைக்குப்பின் அரிசி விலை குறையும் வாய்ப்பு உண்டு. 

             ஆனால் இந்த ஆண்டு நெல் விலை பெருமளவு குறைந்த போதிலும், கடந்த 10 நாளுக்கு முன்பு வரை அரிசி விலை குறையாமல் இருந்து வந்தது.ஆனால் தற்போது அரிசி விலை கொஞ்சம் குறையத் தொடங்கி இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் ஒரு மாதத்துக்கு முன், கர்நாடகா பொன்னி விலை கிலோ ரூ. 30 ஆக இருந்தது. தற்போது ரூ. 26 ஆகக் குறைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் அதிசயப் பொன்னி கிலோ ரூ. 26 ஆக இருந்தது ரூ. 22 ஆகவும், பிபிடி பொன்னி கிலோ ரூ. 28 ஆக இருந்தது ரூ. 23 ஆகவும், பொன்மணி கிலோ ரூ. 22 ஆக இருந்தது ரூ. 20 ஆகவும் குறைந்து இருப்பதாகவும் அரிசி வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.

காரணம் என்ன? 

                   அரிசி ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்து இருப்பதால் கர்நாடகம், ஆந்திரம் மாநிலங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி குறைந்துவிட்டதால், தமிழகத்தில் அரிசி விலை குறைந்து வருவதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர். ஆந்திராவில் அரிசி ஆலைகள் மிக நவீன முறையில் அரிசி அரவை செய்கின்றன. நல்ல வெண்மையாகவும், உடைசல் இல்லாமலும் அங்குள்ள ஆலைகள் உற்பத்தி செய்கின்றன.ஆனால் தமிழகத்தில் அரிசி ஆலைகள் அந்த அளவுக்கு இன்னமும் நவீனமாகவில்லை. 

             மேலும் நெல் அரவைக்குப் பயன்படுத்தும் தண்ணீரைப் பொறுத்தும் அரிசியின் நிறம் மாறி விடுகிறது.இதனால்தான் கர்நாடகா பொன்னியை தமிழகத்து நகர்ப்புற மக்கள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். ஆந்திரம், கர்நாடகம் மாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு நாளொன்றுக்கு, 200 லாரிகள் கர்நாடகா பொன்னி புழுங்கல் மற்றும் ஆந்திரா பொன்னி பச்சை அரிசி இறக்குமதி செய்யப்படுவதாகவும், கடலூர் மாவட்டத்துக்கு நாளொன்றுக்கு 10 டன் அரிசி வருவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior