உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 11, 2010

கடலூர் முதுநகரில் ரோட்டில் ரேஷன் அரிசியை கொட்டி போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு




கடலூர் : 

               கடலூர் முதுநகரில் மழை நிவாரணமாக 10 ரூபாய்க்கு ரேஷன் அரிசி கொடுத்ததால் ஆத்திரமடைந்து அரிசியை ரோட்டில் கொட்டி எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

                கடலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கன மழையால் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்தது. முதுநகரில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசியை ரேஷன் கடையில் வாங்கிக் கொள்ளுமாறு கடந்த 4ம் தேதி ஆளுங்கட்சி பிரமுகர்கள் சிலர் டோக்கன் கொடுத்தனர்.

                இதை வாங்கிய மக்கள், இருசப்ப செட்டித் தெருவில் உள்ள 2ம் எண் ரேஷன் கடைக்குச் சென்று டோக்கனை கொடுத்து அரிசி கேட்டனர். ரேஷன் கடைக்காரர், 10 கிலோ ரேஷன் அரிசியை கொடுத்து விட்டு, ரேஷன் கார்டில் இன்னும் 10 கிலோ அரிசி மட்டுமே வாங்க முடியும் எனக் கூறினார் .ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும் 20 கிலோ ரேஷன் அரிசியில் 10 கிலோவிற்கான 10 ரூபாயை ஆளுங்கட்சியினர் ரேஷன் கடையில் கொடுத்திருப்பது தெரிந்தது.

              மழை நிவாரணமாக வெறும் 10 ரூபாயை மக்களிடம் நேரடியாக கொடுக்க முடியாது என்பதால், ஆளுங்கட்சியினர் தந்திரமாக ரேஷன் கடையில் கொடுத்திருப்பதை அறிந்து ஆத்திரமடைந்த மக்கள், மழை நிவாரணம் வெறும் 10 ரூபாய் மட்டும் தானா எனக் கேட்டு தாங்கள் வாங்கிய ரேஷன் அரிசியை ரோட்டில் கொட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தினமலரில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. 

                அரசு மானிய விலையில் மக்களுக்கு வழங்கும் அரிசியை, ஆளுங்கட்சியினர் சிலர் மழை நிவாரணமாக வழங்குவதை அறிந்த கலெக்டர், ரேஷன் அரிசியை கார்டுதாரர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்றும், மொத்தமாகவோ, டோக்கன் முறையிலோ வழங்கக் கூடாது என்றும், அவ்வாறு முறைகேடு நடந்தால் ரேஷன் கடை விற்பனையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், கடலூர் முதுநகரில் ரேஷன் அரிசியை நிவாரணமாக வழங்கியவர்கள் மீது போலீசில் புகார் செய்ய உத்தரவிட்டார்.

                 இந்நிலையில், அரசு மானிய விலையில் அரிசி வழங்கும் திட்டத்தை அடையாளம் தெரியாத சிலர் அவமதித்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், கடந்த 8ம் தேதி இரவு கடலூர் வட்டார குடிமைப் பொருள் பிரிவு ஆய்வாளர் மாணிக்கம், கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து, ரேஷன் அரிசியை ரோட்டில் கொட்டி அவமதித்த அடையாளம் தெரியாத ஆண் மற்றும் சில பெண்களை தேடிவருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior