உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 29, 2010

இன்னும் 10 ஆண்டுகளில் நானோ தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை பெறும்: இஸ்ரோ விஞ்ஞானி டி.ஆர்.சிதம்பரம் நம்பிக்கை

               இன்னும் 10 ஆண்டுகளில் நானோ தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை பெறும் என்று திருவனந்தபுரம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) ஐ.எஸ்.யு. இயக்குநர் டி.ஆர்.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்தார்.

          வேலம்மாள் கல்வி நிறுவனத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு அறிவியல் உற்சவப் பெருவிழா எனும் பெயரில் அறிவியல் கண்காட்சி மதுரையில் புதன்கிழமை தொடங்கியது. ஆக. 1-ம் தேதி வரை 5 நாள் நடைபெறும்.

இந்தக் கண்காட்சியைத் தொடங்கி வைத்து அவர் பேசியது:    

               இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்பத்தின் பயனாக தொலைக்கல்வி, தொலை மருத்துவம் ஆகியன நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளன. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இந்தியாவின் பல்வேறு கிராமப்புறப் பள்ளி வகுப்பறைகள், பெரிய கல்வி நிறுவனங்களுடன் இணையதளம் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் இந்தியாவை சர்வ வல்லமை பொருந்திய நாடாக உருவாக்குவதற்கு அறிவியல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு மிக அவசியமாகும்  என்று மறைந்த பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு அன்றைக்கே உறுதிபடத் தெரிவித்தார். 

              நாட்டின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு வசதியுடன் கூடிய அறிவியல் தொழில்நுட்ப மேம்பாடு அவசியம் என்று டாக்டர் அப்துல்கலாமும் வலியுறுத்தியுள்ளார். மறைந்த விஞ்ஞானி விக்ரம் சாராபாய், நாட்டின் மேன்மைக்கு தொழில்நுட்ப மேம்பாட்டுடன் பயன்பாடும் அவசியம் என்று கூறியுள்ளார். இந்தியா இந்த இரு தளங்களிலும் தற்போது நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது.  அதேபோன்று நானோ தொழில்நுட்பத்திலும் இந்தியா பல்வேறு ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முழுப் பயனையும் நாம்  இன்றைக்குப் பெறவில்லை என்றாலும்கூட, இன்னும் 10 ஆண்டுகளில் அனைத்துத் தளங்களிலும் நானோ தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகமாக இருக்கும். 

             இதற்கான ஏராளமான வாய்ப்புகள் நம்மிடம் உள்ளன. இதற்கான திட்டங்களையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.  இந்தியா இதுவரை 50 செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது. இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டவை. விண்வெளி தொழில்நுட்பத்துக்கான செலவு குறைவாகவும், ஆனால் அதிக பலனையும் அளித்துள்ளது. சந்திராயன் இதற்கு ஒரு உதாரணம்.   மேலும், இந்தியாவின் வரைபடத்தைக்கூட துல்லியமாக எடுக்கும் அளவுக்கு நமது செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மிக உன்னத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதனால், பள்ளி மாணவர்கள் அறிவியல் மீது ஆர்வம் காட்டி நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும் என்றார் சிதம்பரம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior