உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 29, 2010

கடலூர் நகராட்சி பாதாள சாக்கடைக் கழிவுகளை உப்பனாற்றில் கலக்கும் திட்டம்

கடலூர்:

           கடலூர் நகராட்சி பாதாள சாக்கடைத் திட்டத்தில் கழிவுகளை உப்பனாற்றில் கலக்க திட்டமிட்டு இருப்பதற்கு, பொதுநல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

               கடலூர் நகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இவற்றில் 32 வார்டுகளுக்கு மட்டும் பாதாளச் சாக்கடைத் திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ரூ.44 கோடியில் தொடங்கப்பட்ட இத்திட்டத்துக்கு மேலும் ரூ.25 கோடி அண்மையில் ஒதுக்கப்பட்டு உள்ளது. 18 மாதங்களில் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட திட்டம் 3 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. பாதாள சாக்கடைத் திட்டத்தைச் செயல்படுத்தும் ஒப்பந்ததாரர்களின் பொறுப்பற்ற செயல்களாலும், குடிநீர் வாரியத்தின் முறையான கண்காணிப்பு இல்லாததாலும் பாதாள சாக்கடைத் திட்டம் கடலூர் மக்களைப் பெரிதும் வாட்டி வதைத்துக் கொணடு இருக்கிறது. உள்ளாட்சித் துறையின் திட்டம் என்பதால், நகராட்சி சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் விழித்துக் கொண்டு இருக்கிறது. 

               இதில் பாதிக்கப்படுவோர் கடலூர் நகர மக்கள்தான்.இத்திட்டம் 2011 மார்ச் மாதத்தில் முடியும் என்று அறிவிக்கப்பட்டாலும் திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு மேலும் காலதாமதம் ஆகும் என்பதும், குறைந்தது ரூ.6 ஆயிரம் வைப்புத் தொகை செலுத்துவதுடன் மாதந்தோறும் ஒரு தொகையை கட்டணமாகச் செலுத்த வேண்டி இருப்பதும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.  தற்போது பாதாள சாக்கடைக் கழிவுகளை எங்கே கலப்பது என்ற பிரச்னையும் அத்துடன் சேர்ந்து உருவாகி இருப்பது மக்களை பெரிதும் குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது. சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை சுமார் 60 ஏக்கரில் அமையும் புல் பண்ணையில் பயன்படுத்தலாம் என்று திட்டமிடப்பட்டது. 

               பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டு, உப்பனாற்றிலோ, ஆண்டில் ஒரு சில நாள்களில் மட்டும் தண்ணீர் ஓடும் கெடிலம் ஆற்றிலோ கலந்து விடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் உப்பனாற்றில் கலப்பதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அனுமதி அளிக்கவில்லை. எனினும் தொடர்ந்து அதற்கான முயற்சியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது. இந்த நிலையில் கடலூர் சிப்காட் தொழிற்சாலைக் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு கடலில் கலக்கப்பட்டு வருகின்றன. எனினும் அனைத்து தொழிற்சாலைகளும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வெளிவராதவாறு சுத்திகரித்துப் பயன்படுத்த வேண்டும் என்ற கொள்கையை மாசுக் கட்டுப்பாடு வாரிம் தொழிற்சாலைகளுக்கு அமுல்படுத்தி வருகிறது. அப்படிப்பட்ட நிலையில் கடலூர் நகராட்சிப் பகுதி மனிதக் கழிவுகளை உப்பனாற்றிலோ, கடலிலோ, கெடிலம் ஆற்றிலோ கலக்க, மாசுக் கட்டுப்பாடு வாரியம் அனுமதிக்குமா என்பது கேள்விக்குறிதான்.

            பாதாள சாக்கடைத் திட்டக் கழிவுகளை கெடிலம் ஆற்றிலோ உப்பனாற்றிலோ கலக்கும் திட்டத்துக்கு, கடலூர் பொதுநல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கடலூர் அனைத்து பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.நகராட்சி அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் எம்.நிஜாமுதீன் தலைமை தாங்கினார். பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் மு.மருதவாணன், திருமார்பன், வெண்புறா குமார், துரைவேலு, கவிஞர் பால்கி, அருள்செல்வன்,  பண்டரிநாதன், ரவி, மன்றவாணன், ரமேஷ், ராமநாதன், மோகனாம்பாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior