சென்னை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் மீண்டும் பி.எட். கல்வியியல் கல்வி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
அடுத்த கல்வியாண்டு முதல் இந்த படிப்பை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.சென்னை பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள் பி.எட். படிப்பை தொலைநிலைக் கல்வி மூலம் முன்னர் அளித்து வந்தன. பட்டப்படிப்பு முடித்துவிட்டு தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்கள் இதன் மூலம் மிகுந்த பயனடைந்தனர். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் தொûலைநிலைக் கல்வி மூலம் பி.எட். படிப்புகளை நடத்த அனுமதி ரத்து செய்யப்பட்டது. இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்கள் மூலம் இப்படிப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தபோதும், நேரடி பி.எட். படிப்பு வழங்கும் தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.
இதற்கு பல மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால், தனியார் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொலைநிலைக் கல்வியில் மீண்டும் பி.எட். படிப்பு கொண்டுவரப்படுமா? என்ற எதிர்பார்ப்பு இவர்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில், சென்னை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் மீண்டும் பி.எட். படிப்புகளை வழங்குவதற்கான முயற்சியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தமிழக அரசின் தடையில்லா சான்றுக்காக பல்கலைக்கழகம் காத்திருக்கிறது.
இதுகுறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் க. திருவாசகம் கூறியது:
தொலைநிலைக் கல்வியில் மீண்டும் பி.எட். படிப்பைத் தொடங்க தேசிய கல்விக் கவுன்சில் அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதிக்கு விண்ணப்பிக்க, தமிழக அரசு தடையில்லா சான்று அளிக்க வேண்டும்.இதற்கு பல மாதங்களுக்கு முன்பே விண்ணப்பித்து விட்டோம். எனவே, விரைவில் கிடைத்துவிடும். தடையில்லா சான்று கிடைத்த ஒரு சில மாதங்களிலேயே, தேசிய கல்விக் கவுன்சிலின் அனுமதியும் கிடைத்துவிடும்.எனவே, அடுத்த கல்வி ஆண்டு முதலே சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் பி.எட். படிப்பு தொடங்க அதிக வாய்ப்புகள் உள்ளன என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக