உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 29, 2010

கடலூரில் நடைமேடையை உரசிக் கொண்டு சென்ற ரயில்

கடலூர்:

             திருப்பாப்புலியூர் ரயில் நிலைய கட்டுமானக் கோளாறு காரணமாக புதன்கிழமை பயணிகள் நடைமேடையில் ரயில் பெட்டிகள் உராய்ந்து சென்றன. ஓட்டுநர் ரயிலை சாமர்த்தியமாக நிறுத்தியதால், விபத்தில் இருந்து 400 பயணிகள் தப்பினர்.

              கடலூர் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் வருவதற்கும் போவதற்குமாக இரு நடைமேடைகள் உள்ளன. விழுப்புரம்- மயிலாடுதுறை மார்க்கம் அகலப் பாதையாக மாற்றப் பட்டு ரயில்கள் இயக்கப்பட்ட போதிலும், திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் ஒரு நடைமேடையில் மட்டுமே ரயில்கள் இயக்கப்படுகின்றன. லூப் லைன் என்று சொல்லப்படும் மற்றொரு நடைமேடை போடப்பட்டும் அதில் ரயில்கள் இயக்கப்படவில்லை. புதன்கிழமை காலை 8-20 மணிக்கு வந்த விழுப்புரம்- மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் முதல்முறையாக லூப் லைனில் அனுமதிக்கப்பட்டது.  ஆனால், அதனுள் நுழைந்ததும் ரயிலின் பல பெட்டிகள் நடைமேடையில் பலத்த சப்தத்துடன் உராய்ந்து சென்றன. இதனால் நடைமேடையும் ரயில் பெட்டிகளும் சேதம் அடைந்தன. ரயிலில் இருந்த 400 பயணிகளும், பிளாட்பாரத்தில் நின்றிருந்த 75 பயணிகளும் அச்சத்தில் நடுங்கினர். ரயில் 15 கி.மீ. வேகத்தில் வந்ததால், ஓட்டுநர் சாமர்த்தியமாகச் செயல்பட்டு ரயிலை நிறுத்தினார்.திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தில் பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்பதில்லை. அத்தகைய எக்ஸ்பிரஸ் ரயில் ஏதேனும் இந்த நடைமேடை வழியாக வந்து இருந்தால், விளைவு மோசமாக இருந்திருக்கும், பல பெட்டிகள் தடம் புரண்டு இருக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில்,

            4 மாதங்களுக்கு முன் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பார்வையிட்டபோது, திருப்பாப்புலியூர் ரயில் நிலைய லூப் லைனுக்கு, அனுமதி அளிக்கவில்லை. திட்டத்தை நிறைவேற்றிய ஆர்.வி.என்.எல். நிறுவனமும் லூப்லைனை ரயில்வேயிடம் ஒப்படைக்கவில்லை.இந்த நிலையில் லூப் லைனில் ரயிலை அனுமதிக்குமாறு ரயில்வே உயர் அதிகாரிகள், திருப்பாப்புலியூர் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு புதன்கிழமை உத்தரவிட்டனர். ரயில்நிலைய அதிகாரிகள் மறுத்தும் உயர் அதிகாரிகள் தங்கள் உத்தரவைத் திணித்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

அரை வட்ட ரயில் நிலையம்

               மேலும் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு, திருப்பாப்புலியூர் ரயில் நிலையம் அரை வட்ட வடிவில் அமைந்து உள்ளது. ஆரம்பத்திலேயே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பிளாட்பாரத்தை நேராக அமைக்க வாய்ப்பு இருந்தும், ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ள வில்லை. தற்போதைய விபத்துக்கு இதுவும் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. ரயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து லூப் லைன் பிளாட்பாரத்தை சீரமைக்கும் வேலையில் ஈடுபட்டு உள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior