கடலூர்:
கடலூர் அருகே தொழிற்சாலைக்கென வாங்கப்பட்ட நிலத்தில் ஆயிரக் கணக்கான மரங்கள் வெட்டப்படுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் தி.திருமால்வளவன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலூர் அருகே நொச்சிக்காடு, தியாகவல்லி, நடுத்திட்டு, ராசாப்பேட்டை, சித்திரைப்பேட்டை, குடிகாடு உள்ளிட்ட கிராமங்களில் அனல்மின் நிலையம் அமைக்க 1100 ஏக்கர் நிலம் வாங்கத் திட்டமிட்டு 500 ஏக்கருக்கு மேலான நிலம் வாங்கப்பட்டு உள்ளது. இந்த நிலங்களில் முந்திரி, சவுக்கு, பனை, தென்னை, வேம்பு, யூகலிப்டஸ் மரங்கள், வெட்டி வேர் வயல்கள் அதிகம் உள்ளன. தொழிற்சாலைக்காக வாங்கப்பட்ட நிலத்தில் இருந்து 20 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் தொழிற்சாலை அமைக்க இன்னமும் அனுமதி கிடைக்க வில்லை.
ஆனால் நிலம் வாங்கிய நிறுவனம் இந்த நிலங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டத் தொடங்கி உள்ளன. சுற்றுச்சூழலைப் பாதிக்காத அளவுக்கு தொழிற்சாலை அமைக்கப்படும் என்று அரசிடமும் மக்களிடமும் வாக்குறுதி அளித்து இருக்கும் இந்த நிறுவனம் தற்போது சுற்றுச் சூழலைப் பாதிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான முந்திரி மரங்கள் உள்ளிட்டவற்றை வெட்டி விற்கத் தொடங்கி உள்ளன. இதனால் அந்த நிலங்கள் பாலைவனமாக்கப்பட்டு வருகிறது. வேளாண் நிலங்களை தொழிற்சாலைகளுக்காகக் கையகப்படுத்த மாட்டோம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த நிலையில் மேற்கண்ட கிராமங்களில் வேளாண் நிலங்களை தொழிற்சாலைகள் வாங்கிக் கொண்டு, சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில், சுனாமியின்போது பாதுகாப்பு அரணாக விளங்கிய மரங்களை வெட்டி வீழ்த்துவதை அனுமதிக்க முடியாது.
மரங்கள் வெட்டப்படுவதைத் தடுத்து நிறுத்தாவிட்டால், அப்பகுதி மக்களையும் மனித உரிமை, நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளைத் திரட்டி போராட்டம் நடத்துவோம். தொழிற்சாலைக்கு அனுமதி கிடைக்காததால், வாங்கப்பட்ட நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என்று திருமால்வளவன் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக