உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 30, 2010

ஏரியில் இலவசமாக களிமண் எடுக்க அனுமதி வேண்டும்


கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அருண்.
 
பண்ருட்டி:

 
               கிருஷ்ண ஜயந்தி நெருங்கிவிட்ட நிலையில் பண்ருட்டி அருகே கிருஷ்ணர் பொம்மைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. பண்ருட்டி வட்டம் ஏரிப்பாளையம், வையாபுரிபட்டிணம், திருவதிகை, பூங்குணம், புதுப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் நூற்றுக்கணக்கான குயவர் குடும்பங்கள் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
 
                தற்போது மண்பாண்டங்களின் பயன்பாடு வெகுவாகக் குறைந்துவிட்ட நிலையில், இவர்கள் சீசனுக்குத் தகுந்தபடி பல்வேறு பொம்மைகள் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ண ஜயந்தி பண்டிகையையொட்டி தற்போது கிருஷ்ணர் பொம்மைகள் தயாரிப்பில் இவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
 
இதுகுறித்து வையாபுரிபட்டிணத்தைச் சேர்ந்த மண்பாண்டத் தொழிலாளர் அருண் கூறியது:
 
                 தற்போது மக்கள் மண்பாண்டங்களை பயன்படுத்துவது இல்லை. திருமணம், கோயில் திருவிழா, பொங்கல் பண்டிகை ஆகிய நிகழ்ச்சிகளுக்கு மட்டும் மண்பாண்டங்கள் வாங்குகின்றனர்.கார்த்திகை தீபத்தன்று அகல் விளக்கு பயன்படுத்துவோர் கூட தற்போது மெழுகு மற்றும் பீங்கான் விளக்குகளுக்கு மாறி வருகின்றர். இதனால் மண்பாண்டங்கள் உற்பத்தி குறைந்து பல குடும்பங்கள் கஷ்டப்படுகின்றன. அக் குடும்பங்களைச் சேர்ந்த இளைய தலைமுறையினர் குடும்பத் தொழிலை விடுத்து மாற்றுத் தொழிலுக்கு மாறி வருகின்றனர்.
 
                இந்நிலையில் குடும்பத் தொழிலை செய்துவரும் நாங்கள், விநாயகர், கிருஷ்ணர் உள்ளிட்ட கடவுள் பொம்மைகள், குழந்தைகளை கவரும் வகையில் விலங்குகள், பறவைகள், உண்டியல் போன்ற பொம்மைகள் செய்து வருகிறோம். இவற்றை உள்ளூர் சந்தையிலும், கோயில் திருவிழாக்களிலும் விற்பனை செய்கிறோம்.விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜயந்தி, நவராத்திரி ஆகிய காலத்தில் சென்னை, திருச்சி, சேலம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் எங்களிடம் பொம்மைகள் வங்கிச் செல்வர். இதில் கிடைக்கும் கணிசமான வருவாய் மூலமே குடும்பத்தை நடத்தி வருகிறோம்.
 
                  இந்நிலையில் ஏரியில் இருந்து களிமண் எடுக்க, பணம் செலுத்தி, சுரங்க உதவி இயக்குநரிடம் அனுமதி பெற பின்புதான் மண் எடுக்க வேண்டும் என அறிவித்துள்ளனர். மேலும் அவர்கள் அளந்து விடும் இடத்தில் தான் களிமண் எடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இதனால் தரமான களிமண் எடுக்க முடியாத சூழல் ஏற்படும். மண் சரியில்லை என்றால் பொம்மைகள், சட்டி பானைகள் செய்ய முடியாது. நலிவடைந்த நிலையில் மாற்றுத் தொழிலுக்கும் செல்ல முடியாத சூழலில், நாங்கள் பணம் கட்டி ஏரியில் களிமண் எடுக்க முடியாத நிலையில் உள்ளோம். பல்வேறு இலவச திட்டங்களை செயல்படுத்தும் தமிழக அரசு, மண்பாண்டத் தொழிலாளர்களின் நலன் கருதி ஏரியில் இலவசமாக களிமண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior