மின் விளக்குகள், இயங்காததால் இருளில் மூழ்கிய பெண்கள் வார்டு.
பண்ருட்டி:
பண்ருட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் தங்கும் வார்டு உள்ளிட்ட பகுதிகள், அடிப்படை வசதி இல்லாமலும் அசுத்தமாகவும் உள்ளதால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது.
பண்ருட்டி மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதியில் இருந்து நாள்தோறும் 1500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் புறநோயாளிகளாக சிகிச்சை பெற வருகின்றனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.மருத்துவமனை வளாகம் பராமரிப்பின்றி புதர் மண்டிக் கிடப்பதால் பாம்பு, விஷப் பூச்சிகளின் சரணாலயமாக உள்ளது. மேலும் சில இடத்தில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் உள் நோயாளிகள் கொசுக் கடிக்கும், விஷப்பூச்சிகளுக்கு இடையே தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனைக்கு வருகை தரும் நோயாளிகளுக்காக கட்டப்பட்ட இரு கழிப்பறைகள் இது நாள் வரையில் திறக்கப்படாமல் உள்ளன. இதனால் மருத்துவமனைக்கு வருபவர்களால் வளாகம் அசுத்தம் செய்யப்படுவதாலும், பன்றிகள், கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகள் மருத்துவமனை வளாகத்தில் சுதந்திரமாக சுற்றி வருவதாலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர் .மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் வார்டு, பிரசவ வார்டு பகுதியில் உள்ள ஜன்னல்கள் சேதமடைந்தும், கண்ணாடிகள் உடைந்து உள்ளன. மேலும் வார்டு பகுதியில் விளக்குகள் எரியவில்லை, மின் விசிறிகள் இயங்கவில்லை. இதனால் கொசுக்கடியில் பாதிக்கப்படும் நோயாளிகள் தங்களைச் சுற்றிலும் கொசுவர்த்திகளை ஏற்றி வைத்துக்கொள்கின்றனர். இந்த கொசுவர்த்தியில் இருந்து வரும் புகையை நோயாளிகள் சுவாசிப்பதால் சுவாச நோய்க்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பிறந்த சிசுக்களும், குழந்தைகளும் கொசு வத்தி புகையால் பெரிதும் பாதிப்படைகின்றனர்.
பல்வேறு விபத்துகள், உயிருக்கு போராடும் நோயாளிகள் சிகிச்சைக்காக கடலூருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். பண்ருட்டி அரசு மருத்துவமனையில் உள்ள அவசர ஊர்தி ஆயுள் முடிந்தும் ஓடிக்கொண்டுள்ளது. இவற்றை மாற்றி தரவேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் பலமுறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் பலனில்லை.பராமரிப்புப் பணிகளை டெண்டர் மூலம் எடுக்கும் முக்கியஸ்தர்கள் பெயரளவில் பணிகளை செய்துவிட்டு கணக்கு முடித்து விடுகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர் இருப்பதால் பொதுப்பணித் துறை அதிகாரிகளும், மற்றவர்களும் கேள்வி கேட்க முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்தனர்.
இது குறித்து பொதுப்பணித்துறை (கட்டட பராமரிப்பு) இளநிலை பொறியாளர் எஸ்.கிருஷ்ணசாமி கூறியது:
"ஆண்டுக்கு ஒரு முறைதான் பணம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பராமரிப்பு செய்யப்பட வேண்டிய கட்டடங்கள் குறித்த அறிக்கையை ஏப்ரல் மாதத்தில் உயர் அதிகாரிகள் கேட்பர். இதை அனுப்பிய பின்னர்தான் நிதி ஒதுக்கப்படும்.நிதி எப்போது ஒதுக்குவார்கள் என்பது தெரியாது. வரும் நிதியில் அத்தியாவசியப் பணிகளை முதலில் முடிப்போம்' என்றார். தமிழக சுகாதார அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான பண்ருட்டியிலேயே இந்த நிலை என்றால் பிற மருத்துவமனைகளை கேட்கவா வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக