கடலூர் அருகே பெரியப்பட்டு கிராமத்தில் மூடிக்கிடக்கும் ஆவின் தொகுப்பு குளிரூட்டும் மையம்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் பெரியப்பட்டு, அம்மாப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் மையங்கள் பல மாதங்களாக செயல்பாடின்றி மூடிக்கிடக்கின்றன. ஆவினன்குடி குளிரூட்டு மையம் மூடப்படும் நிலையில் உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் பால் உற்பத்தியைப் பெருக்கவும், சேமித்து வைப்பதற்குக் கூடுதல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும், ஆவின் நிறுவனம் 2 ஆண்டுகளுக்கு முன் விழுப்புரம் மாவட்டத்தில் 12, கடலூர் மாவட்டத்தில் 7 ஆவின் தொகுப்பு குளிரூட்டு மையங்களை உருவாக்கியது. கடலூர் மாவட்டத்தில் வடபாதி, மாளிகைமேடு, ஆவினன்குடி, மங்களூர், பெரியப்பட்டு, அம்மாபேட்டை, வேப்பூர் ஆகிய ஊர்களில் தொகுப்பு குளிரூட்டு மையங்கள் உருவாக்கப்பட்டன.
இவற்றில் வேப்பூர் 2 ஆயிரம் லிட்டரும் மற்ற 6-ம் தலா 5 ஆயிரம் லிட்டரும் தினமும் சேமித்து வைக்கும் திறன் கொண்டவை. இவை அந்தந்த ஊரில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களின் கட்டுப்பாட்டில் விடப்பட்டன. இவை ஒவ்வொன்றும் |10 லட்சத்துக்கு மேல் செலவிடப்பட்டு, ஸ்டெயின்லஸ் ஸ்டீல் டாங்க், குளிர்பதன இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட வசதி கொண்டவை.
அருகில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்கள் வழங்கும் பாலை இவற்றில் சேமித்து வைத்து, ஆவின் நிறுவன டேங்கர் லாரிகள் வரும்போது வழங்கப்படும். பாலை, கூட்டுறவு சங்கங்கள் நீண்டதூரம் எடுத்துச் செல்ல வேண்டியது இருப்தால், பால் வீணாவதைத் தடுக்கவும், அந்தந்த பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் ஆவினுக்கு எளிதில் பால் சப்ளை செய்ய வசதியாகவும் இந்த மையங்கள் உருவாக்கப்பட்டன.
ஆனால் கடலூர் மாவட்டத்தில் பெரியப்பட்டு, அம்மாப்பேட்டை தொகுப்பு குளிரூட்டு மையங்கள் செயல்படாமல் பல மாதங்களாக மூடிக் கிடக்கின்றன. ஆவினன்குடி குளிரூட்டு மையம் மூடப்படும் நிலையில் உள்ளது. இங்கு யாரும் பால் வழங்குவது இல்லையாம். இதனால் இந்த 3 மையங்களிலும் பல லட்சம் மதிப்புள்ள இயந்திரங்கள் சேதம் அடையத் தொடங்கி இருப்பதாக பால் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதுகுறித்து பால்உற்பத்தியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் கடலூர் மாவட்டச் செயலர் கார்மாங்குடி வெங்கடேசன் கூறுகையில்,
""இந்த பால்குளிரூட்டும் மையங்களை நிர்வகித்த கூட்டுறவு சங்கங்கள், அவற்றை முறையாக நடத்தவில்லை. பால் தரநிர்ணயம் முறையாகச் செய்யவில்லை. பல நேரங்களில் பால் கூட்டுறவு சங்கங்கள் லிட்டர் | 13 என கொள்முதல் செய்து அனுப்பிய பாலை, இந்த மையங்கள் தரம் குறைந்தது எனக் கணக்கிட்டு, லிட்டருக்கு வெறும் | 1-20 மட்டும் வழங்கி இருக்கின்றன.இதனால் வெறுப்படைந்த பால் கூட்டுறவு சங்கங்கள், மேற்கண்ட குளிரூட்டும் மையங்களுக்கு பால் அனுப்புவதை நிறுத்திவிட்டு, தனியாரிடம் விற்பனை செய்யத் தொடங்கி விட்டன. முறையாக நடத்துவோர் கையில் இந்த மையங்களை ஒப்படைக்க வேண்டும்'' என்றார்.
இதுகுறித்து ஆவின் நிறுவன பொதுமேலாளர் பொன்னம்பலம் கூறுகையில்,
""மேற்கண்ட பால்குளிரூட்டும் மையங்களை நடத்திய செயலாளர்கள் அவற்றை முறையாக நிர்வகிக்கவில்லை. மூடப்பட்ட தொகுப்பு பால் குளிரூட்டும் மையங்களை ஆவின் நிறுவனமே ஏற்று நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மூடப்பட்ட மையங்கள் விரைவில் திறக்கப்படும்'' என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக