உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, செப்டம்பர் 25, 2010

தேசிய அடையாள அட்டை தனி கணக்கெடுப்புக்கு தமிழகம் எதிர்ப்பு


 
                         தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள தனி கணக்கெடுப்புக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான விவரங்களின் அடிப்படையில் தேசிய அடையாள அட்டை வழங்கலாம் என அது கூறியுள்ளது.  
 
                    மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது. இந்த சூழ்நிலையில், தேசிய அடையாள அட்டைக்கு தனியாக கணக்கெடுப்பை மேற்கொள்ளும் போது மக்களின் வரிப்பணம் மேலும் வீணாகும் என்ற கருத்தை தமிழக அரசு முன்வைத்துள்ளது.  நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி மூலம் இந்தியாவில் மக்கள் தொகை எவ்வளவு என்கிற தகவல் தெரியவரும். 
 
                        இந்தக் கணக்கெடுப்பை மையமாக வைத்து தேசிய அடையாள அட்டை தயாரிக்கலாம் என்கிற யோசனையை அடையாள அட்டை ஆணையம் ஏற்கத் தயாராக இல்லை.  இதனிடையே, தேசிய அடையாள அட்டை பணி தொடர்பாக வருவாய், உணவுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பெங்களூர் சென்று ஆலோசனை நடத்தியுள்ளனர்.   இந்தியாவில் குடியிருக்கும் மக்களை அடையாளம் காண்பதற்கு வசதியாக அவர்கள் ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டை வழங்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதற்கென, "இன்போசிஸ்' மென்பொருள் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி நந்தன் நிலகேணி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
 
                  இந்த ஆணையத்தின் தலைமையகம் பெங்களூரில் செயல்பட்டு வருகிறது.   இந்த ஆண்டுக்குள் 10 கோடி பேருக்கு அடையாள அட்டை வழங்க ஆணையம் இலக்கு நிர்ணயித்துள்ளது. வங்கிகள் போன்ற சேவை அடிப்படையிலான துறைகளில் வாடிக்கையாளர்களாக உள்ளவர்களின் விவரங்களை அந்தந்த துறைகள் மூலம் திரட்ட தேசிய அடையாள அட்டை ஆணையம் முடிவெடுத்துள்ளது.   வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களில், பலர் வருமான வரியை கட்டுபவர்களாக இருப்பார்கள். எனவே, வங்கி வாடிக்கையாளர் பற்றிய விவரத்தை, வங்கி மூலமாகவும், அந்த வாடிக்கையாளர் வருமான வரி செலுத்துபவராக இருந்தால் வருமான வரித்துறை மூலமாகவும் பெற வாய்ப்பு உள்ளது. 
 
                                  தேசிய அடையாள அட்டை ஆணையத்தின் முடிவின்படி, ஒரு நபர் குறித்து இரு துறைகளும் தகவல்களைத் தெரிவிக்கும். அதில் ஏதேனும் ஒன்றை ஆணையம் எடுத்துக் கொள்ளும். மற்றொரு துறையின் தகவலையோ அல்லது தனக்குத் தேவையில்லாத விவரங்களையோ நிராகரிக்கும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior