உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, செப்டம்பர் 25, 2010

கடலூரில் களை இழந்த பூங்காக்கள்


சிதைந்த செயற்கை நீருற்றுகள் - திருடுபோன வண்ண விளக்குகள் - காய்ந்த புல் தரைகள்.
 
கடலூர் :  

               கடலூரில் 5 ஆண்டுகளுக்கு முன், பல லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட செயற்கை நீரூற்றுகள், பூங்காக்கள், வண்ண விளக்குகள் ஆகியன பராமரிப்பு இன்றி சிதைந்து கிடக்கின்றன. ககன்தீப்சிங்பேடி,கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, 2004, 2005-ம் ஆண்டுகளில், கடலூர் நகராட்சிப் பகுதியில் நகரை அழகுப்படுத்தும் திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டன.

                   பல்வேறு நிதிஉதவிகளைப் பெற்று, பிரதான சாலைகள் அனைத்திலும் சாலைப் பகுப்பான்கள் (டிவைடர்கள்) அமைக்கப்பட்டன. சாலை நடுவில் கம்பங்கள் நடப்பட்டு, மின் விளக்கு அமைக்கப் பட்டன.பிரதான சாலைகளின் ஓரங்களில் சிறிய பூங்காக்களும் அவற்றின் நடுவே, வண்ண விளக்குகளுடன் கூடிய செயற்கை நீரூற்றுகள் உருவாக்கப்பட்டன. நமக்கு நாமே திட்டத்தில், கடலூர் சிப்காட் தொழிற்சாலைகள் அளித்த பல லட்சம் நிதி உதவிகளுடன், நகராட்சி நிதியையும் சேர்த்து, இந்த செயற்கை நீரூற்றுகள், நகரில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டன.

               சாலைகளில் செல்வோர் பார்த்து மகிழும் வகையில் அமைக்கப்பட்ட இந்த பூங்காவுடன் கூடிய செயற்கை நீரூற்றுகளில், ஒன்றிரண்டைத் தவிர ஏனைய அனைத்தும், நகராட்சியால் பராமரிக்கப்பட்டு வந்தன. மற்ற சில நகராட்சிகளைப் போல், கடலூரில், தண்ணீர் தட்டுப்பாடு எதுவும் வந்து விடவில்லை. ஆனாலும் கடந்த 2 ஆண்டுகளாக, இந்த சிறிய பூங்காக்களுக்கு தண்ணீர் ஊற்றாமலும், விளக்குகள், நீரூற்றுக்களைப் பராமரிக்காமலும், அவை பரிதாபமாகக் களையிழந்து காணப்படுகின்றன.

                 சிதம்பரம் சாலையில் ரயில்வே மேம்பாலம் சந்திக்கும் இடத்தில், வானவில் தோன்றும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த வண்ண விளக்குகள், கொத்தாகத் திருடு போய்விட்டன.இதேபோல் மற்ற பூங்காக்களிலும் அமைக்கப்பட்டு இருந்த வண்ண விளக்குகள், செயற்கை நீரூற்றுகளுக்கான மோட்டார்கள் அனைத்தும், திருடு போய்விட்டன. குறைந்தபட்சம், இவை காணாமல் போய்விட்டன என்று, காவல் நிலையத்தில் புகார்கள் கூட, நகராட்சியால் அளிக்கப்படவில்லை என்பது, வேதனை தரும் விஷயம்.

             இதேபோல் சாலைகள் நடுவே அமைக்கப்பட்ட டிவைடர்களில், விலை உயர்ந்த பூஞ்செடிகள், கொரியன் புல் தளங்கள் கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தன. இவற்றுக்கு முறையாக தண்ணீர் ஊற்றாததாலும், மாடுகள் மேய்வதைக் கண்டும் காணாமல் விட்டதாலும், பட்டுப் போனதுடன், அவைகள் இப்போது காட்டுச் செடிகள் நிறைந்த புதர்களாய் காட்சி அளிக்கின்றன.அறிவிப்புப் பலகைகளும் சேதம் அடைந்து கிடக்கின்றன. ஒருமுறை இதுதொடர்பாக செய்தியாளர்கள் முன்னிலையிலேயே நகராட்சி ஆணையரை மாவட்ட ஆட்சியர் கடுமையாகச் சாடினார்.

                 தொழிற்சாலைகளின் உதவியுடன், நகரை அழகுப்படுத்தும் திட்டத்தை ஏன் மேற்கொள்ளக் கூடாது என்றும் ஆணையரிடம் கேள்வி எழுப்பினார்.ஆனாலும் எந்த மாற்றமும் காணப்படவில்லை. ஏற்கெனவே தொழிற்சாலைகள் வழங்கிய பல லட்சத்தால் உருவாக்கப்பட்ட பூங்காக்கள், செயற்கை நீரூற்றுகள் அனைத்தும் பராமரிப்பு இன்றி பாழாய்க் கிடக்கும் நிலையில், எந்த முகத்துடன் மீண்டும் தொழிற்சாலைகளை அணுகுவது என்ற நாணம், நகராட்சிக்கு ஏற்பட்டு இருக்கலாம்."எதற்கும் பணமில்லை என்று கைவிரிக்கும் நகராட்சி, புதிதாக எதையும் செய்து விட வேண்டாம். 

                         முந்தைய காலங்களில் உருவாக்கப்பட்டவைகளையாவது  பராமரித்துப் பாதுகாக்கும் எண்ணம் கூட, நகராட்சி அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் இல்லாதது, எங்களின் துரதிருஷ்டமாகத்தான் இருக்கும்; என்று கடலூர் மக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.இதற்கெல்லாம் நகராட்சியில் கூட்டம் நடத்தி, தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. நகராட்சி ஊழியர்கள் தங்கள் கடமையை உணர்ந்து செயலாற்றினாலே போதும். ஊதியம் பெற்று உழைப்போருக்கு, அந்தக் கடமை உணர்வுகூட இல்லாதபோது, ஆண்டுக்கு 5 கோடி வரி செலுத்துவதால் பயன் ஏதும் இல்லை என்கிறார்கள் கடலூர் பொதுமக்கள்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior