கடலூர் :
கடலூர் சிப்காட் வளாகத்தில் அரசு அனுமதியின்றி விதிமுறைகளை மீறி இயங்கி வரும் "கியூசக்ஸ்' சுத்திகரிப்பு நிலையத்தை உடனடியாக மூட ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடலூரில் கடந்த 1984ம் ஆண்டு சிப்காட் தொழிற்பேட்டை துவங்கப்பட்டது. இதில் இயங்கி வரும் ரசாயன மற்றும் மருந்து தொழிற்சாலைகள் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் அருகில் உள்ள நீர் நிலைகளில் விட்டன. இதனால் நீர் நிலைகளில் மீன் வளம் குறைந்ததோடு, விளை நிலங்களும் பாதிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, அனைத்து தொழிற்சாலைகளும் ஒருங்கிணைந்து சுத்திகரிப்பு நிலையம் அமைத்து அதன் வழியாக கழிவு நீரை கடலில் 2 கி.மீ., தொலைவிற்கு கொண்டு சென்று கலக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
அதன்படி கடந்த 2001ம் ஆண்டு சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் கம்பெனிகள் இணைந்து "கியூசக்ஸ்' என்ற பெயரில் சுத்திகரிப்பு நிலையத்தை துவங்கி கழிவு நீர் கடலில் கலக்கப்பட்டது. இவ்வாறு வெளியேற்றப்படும் கழிவு நீர் முறையாக சுத்திகரிக்கப்படாததால் கடலில் மீன் வளம் குறைவதாகவும், காற்று மாசுபடுவதால் சுற்று வட்டார மக்கள் பல்வேறு நோயினால் பாதிப்பதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் கடந்த 2004ம் ஆண்டு குளோபல் கம்யூனிட்டி மானிட்டரிங் அமைப்பு மற்றும் நுகர்வோர் அமைப்புகள் கடலூர் சிப்காட் பகுதியை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது. அதில் கம்பெனிகளில் வெளியேற்றப்படும் கழிவு நீர் மற்றும் வாயுக்களால் காற்று மற்றும் நீர் மாசுபடுவதாக கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியை அடிப்படையாக கொண்டு அப்போதைய ஐகோர்ட் தலைமை நீதிபதி வழக்கு தொடர்ந்தார். 6 ஆண்டாக விசாரணை நடந்து வந்த இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த 8ம் தேதி கூறப்பட்டது.
அதில் சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை சுத்திகரிப்பதற்காக உருவாக்கப்பட்ட "கியூசக்ஸ்' நிறுவனம் அரசிடம் உரிய அனுமதி பெறாமலேயே இயங்கி வருவதோடு, முறையாக ஒவ்வொரு கம்பெனியில் இருந்தும் வெளியேற்றப்படும் கழிவு நீரை ஆய்வு செய்யாததால், "கியூசக்ஸ்' நிறுவனத்தை மூடவும், மேலும், இந்நிறுவனத்தின் உறுப்பினர்களாக உள்ள கம்பெனிகளின் உரிமம் புதுப்பித்தலை நிறுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக