கடலூர்:
சாலைகளை விவசாயிகள் களங்களாகப் பயன்படுத்தக் கூடாது, மீறி அவ்வாறு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் சில விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை உலர்த்துவதற்கு, நெடுஞ்சாலைகளைக் களமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக கம்பு, கேழ்வரகு, எள் போன்றவற்றை நெடுஞ்சாலைகளில் உலரவைத்து அதைச் சுற்றிலும் கற்கள், மரத்துண்டுகள், முள்செடிகளை அரணாக வைக்கிறார்கள். இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.
கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களைத் தூற்றும்போது வெளிப்படும் மணல் கலந்த தூசுகள், வாகன ஓட்டிகளின் கண்களில் விழுந்து, கண் எரிச்சல் அடைவதுடன் அவர்கள் மேற்கொண்டு வாகனங்களை ஓட்ட முடியாமல் விபத்தில் சிக்க நேரிடுகிறது. சாலைகளில் இரு வழிப்பாதைகள் ஒருவழிப் பாதையாக மாறி போக்குவரத்து தடைபடுகிறது. இரவு நேரங்களிலும் சாலைகளில் கதிரடிப்பதால், அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகின்றன.
விவசாயிகளுக்குத் தேவையான களங்களை, மாவட்ட நிர்வாகம் முன்னுரிமை அடிப்படையில் அமைத்துத் தந்துள்ளது. வேளாண் விற்பனைத்துறை, மாவட்ட விற்பனைக்குழு மூலமாக களங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. விவசாயிகள் இக்களங்களை பயன்படுத்த வேண்டும். பெரு விவசாயிகள் தங்கள் நிலத்தில் மேடான பகுதிகளை களங்களாகப் பயன்படுத்தலாம். சிறு விவசாயிகள் தார்பாய்களை பயன்படுத்தி தானியங்களை உலர்த்தலாம். தார்ப்பாய்களை வேளாண் விற்பனைக் குழு மற்றும் தனியாரிடம் வாடகைக்குப் பெற்றுப் பயன்படுத்தலாம்.
உழவர் மன்றங்கள் தார்ப்பாய்களை கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு வாடகைக்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விவசாயிகள் தங்கள் பகுதிகளில் உலர் களங்கள் அமைக்கக் கோரிக்கை அளித்தால்முன்னுரிமை அடிப்படையில், மாவட்ட நிர்வாகம் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளும். அதையும் மீறி நெடுஞ்சாலைகளை களமாகப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக