கடலூர் :
கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 130 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.
கடலூர் சுப்ராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் 57வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நேற்று நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., அய்யப்பன், சேர்மன் தங்கராசு, டி.ஆர்.ஓ., நடராஜன் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் மிருணாளினி திட்ட விளக்க உரையாற்றினார். எம்.எல்.ஏ., ரவிக்குமார், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பிரான்சிஸ்மேரி ஞானமுத்து, நகரமன்ற துணைத் தலைவர் தாமரைச் செல்வன், மாவட்ட விற்பனைக்குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி வாழ்த்திப் பேசினர்.
நலத்திட்ட உதவிகள், சிறந்த கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் பன்னீர் செல்வம் பரிசு வழங்கி பேசியது:
கடலூர் மாவட்டத்தில் நான்கு ஆண்டுகளில் 24 ஆயிரத்து 772 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 196 கோடியே 46 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் 190 கோடி ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டு 130 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
கடலூர், பண்ருட்டி கூட்டுறவு சங்கங்கள் மூலம் மருந்து விற்பனை நிலையங்கள் துவங்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக மாவட்டம் முழுவதும் துவங்கப்படும். 60 பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் 30 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்காக முதற்கட்டமாக 45 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். கடலூர் சரக துணை பதிவாளர் ஜெயமணி நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக