சிதம்பரம்:
சிதம்பரம் அருகே விளைநிலங்களை அழித்து தனியார் மின்னுற்பத்தி நிலையம் அமைக்கவுள்ளதை தடுத்து நிறுத்த வேண்டும் என அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவை பொதுச்செயலாளர் வீர.வன்னியராஜா, கோரிக்கை விடுத்தார். இது குறித்து கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரியை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
மனு விவரம்:
கடலூர் மாவட்டத்தில் 90 சதவீதம் பேர் விவசாய நிலங்களை சார்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது ஜீவாதாரமான விவசாய நிலங்கள் அடிமட்ட குறைந்த விலையான ஏக்கர் ரூ.1 லட்சத்துக்கு தனியார் நிறுவனம் ஒன்று மூலம் வாங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக கடலூர் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கிராமங்களான பூவாலை, வயலாம்பூர், மணிக்கொல்லை, அலமேலு மங்காபுரம், தச்சக்காடு, அருண்மொழிதேவன், சின்னக்குமட்டி, சாமியார்பேட்டை, ஆலப்பாக்கம், தியாகவள்ளி, பெரியக்குப்பம், புத்திரவெளி, சித்திரைப்பேட்டை, ராசாப்பேட்டை, குடிகாடு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள நல்ல விளைச்சல் தரும் நிலங்கள் தனியார் மின் உற்பத்தி நிலையம், எண்ணெய் சுத்தகரிப்பு நிலையம் ஆகியவற்றால் குறைந்த விலையில் வாங்கப்பட்டுள்ளது.
இதனால் எதிர்காலத்தில் விவசாயம் செய்யக்கூட நிலம் இல்லாத அபாய நிலை உருவாகிவிடும். அதுமட்டுமல்லாது விவசாயத்தை நம்பி வாழ்ந்த விவசாயத் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். எனவே விவசாயிகளின் நலன் கருதி புதிதாக தனியார் நிறுவனங்கள் அமைவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மனுவில் வீர.வன்னியராஜா தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக