கடலூர்:
கடலூர் மாவட்ட குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், அறிவியல் கட்டுரைகள் சமர்ப்பித்தல் போட்டியில் கடலூர் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதல் பரிசு பெற்றனர்.
தேசிய அறிவியல் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து ஆண்டுதோறும், குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்துகின்றன.இந்த ஆண்டுக்கான கடலூர் மாவட்ட குழந்தைகள் அறிவியல் மாநாடு, பண்ருட்டி ஜான் டூயி பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் கடலூர் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 40 பேர் தங்களது அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். மண் வளத்தை நாசமாக்கும் பாலிதீன் குப்பைகள், வேளாண் பொருள்கள் கொள்முதலில் கடலூர் மாவட்டத்தின் நிலை உள்ளிட்ட பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
கடலூரைச் சுற்றியுள்ள 13 வேளாண் நிலங்களில் கரும்பு, காய்கறி, முந்திரிப் பயிர்களை மாணவர்கள் ஆய்வு செய்து, பாலித்தீன் குப்பைகள் மண்ணில் கலந்ததால் ஏற்பட்ட பாதிப்புகளை முடிவுகளாக அறிவித்தனர்.கம்மியம்பேட்டை, செல்லங்குப்பம், பட்டாம்பாக்கம், கரைமேடு ஆகிய இடங்களில் குவிக்கப்பட்டு உள்ள பாலித்தீன் குப்பைகளால், குடிநீர் மற்றும் காற்றில் நச்சுக் கழிவுகள் கலப்பதை மாணவர்களின் ஆய்வு முடிவுகள் எடுத்துக் காட்டின. கிருஷ்ணசாமி பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவர்கள் கெüதமன், விஜயகார்க்கி, ஜான்சன் மரியஜோசப், சசிதரன், ராஜேஷ் அரவிந்தகுமார் ஆகியோர் அறிவியல் ஆய்வு அறிக்கைகளைத் தயாரித்தனர்.
இப்பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளுக்கு முதல் பரிசாக டாக்டர் ராஜா ராமண்ணா நினைவு சுழற்கேடயம் வழங்கப்பட்டது. மேலும் 6,7,8-ம் வகுப்பு பிரிவிலும் மாணவர்கள் ஆய்வறிக்கை வழங்கினர். வெற்றி பெற்ற மாணவர்களையும் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களையும், பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் டாக்டர் கே.ராஜேந்திரன், முதன்மை அலுவலர் டாக்டர் சிறீஷா கண்ணன், முதல்வர் ஆர்.நடராஜன் ஆகியோர் பாராட்டினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக