குமராட்சி ஒன்றியத்தில் வெள்ளநீர் சூழ்ந்துள்ள பூலாமேடு கிராமத்துக்கு படகு வழங்கப்பட்டுள்ளதை திங்கள்கிழமை பார்வையிடுகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
சிதம்பரம்:
கடலூர் மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் 17,502 ஹெக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஆட்சியர் பெ.சீதாராமனுடன் சென்று திங்கள்கிழமை பார்வையிட்டார். காட்டுமன்னார்கோவில் வட்டம் எள்ளேரி (கிழக்கு), சர்வராஜன்பேட்டை, வீரநத்தம், திருநாரையூர், கீழவன்னியூர், குமராட்சி, கோ.பாடி, மெய்யாத்தூர், சிதம்பரம் வட்டத்தில் தவிர்த்தாம்பட்டு, புதுபுலாமேடு, நாஞ்சலூர், சிவாயம், மும்முடிசோழபுரம், கத்தாழை, விருத்தாசலம் வட்டத்தில் தர்மநல்லூர், நல்லாத்தூர், க.இளமங்கலம், வெள்ளூர், ஊ.மங்களம் உள்ளிட்ட மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பொதுமக்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் காட்டுமன்னார்கோவில் குமராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மழைநீர் சூழ்ந்துள்ளதை பார்வையிட்டு நிரந்தர தீர்வு காண்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.
பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியது:
மழையால் இதுவரை கடலூர் மாவட்டத்தில் 1,167 குடிசைகள் முழுமையாகவும், 8,166 குடிசைகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. 12 மாடுகள், 12 ஆடுகள் உயிரிழந்துள்ளன. மழையால் இதுவரை 17,502 ஹெக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளது. மழையால் பழுதடைந்துள்ள சாலைகள், அரசுக் கட்டடங்கள் ஆகியவற்றை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட குடிசைகளுக்கும், கால்நடைகளுக்கும் உரிய நிவாரணம் உடனடியாக வழங்கப்படும்.
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பெய்து வரும் மழைநீர் கடலூர் மாவட்டம் வழியாக வடிவதால் ஆண்டுதோறும் விவசாய நிலங்களும், வீடுகளும் பாதிக்கப்படுகின்றன. பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு, வெள்ளாறு, கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது, கடலூர் மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு முதல்வர் கருணாநிதி நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.301 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இப்பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கும்.
திருநாரையூர் கிராமத்தில் வெள்ளியங்கால் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மணவாய்க்கால் மூலம் தண்ணீர் ஓடுவதால் விளை நிலங்கள், குடிசைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே திருநாரையூர் கிராமத்தில் வெள்ளியங்கால் ஓடையில் புதிய பாலம் கட்டுவதற்கு மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரையிலும் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தமிழக அரசு கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
மழையால் பாதிக்கப்பட்ட திட்டக்குடி, விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் ஆகிய வட்டங்களில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு 30 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளன என்றார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். ஆய்வின்போது காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் துரை.ரவிக்குமார், குமராட்சி ஊராட்சி ஒன்றியத் தலைவர் இரா.மாமல்லன், கோட்டாட்சியர் அ.ராமராஜூ, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் எஸ்.செல்வராஜ், மனோகரன், மக்கள்-தொடர்பு அலுவலர் பொ.முத்தையா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக