நெல்லிக்குப்பம் :
மலட்டாறு தூர் வாரியதால் தண்ணீர் வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருக்கோவிலூர் பெண்ணையாற்றில் இருந்து உபரி நீர் மலட்டாறில் திருப்பி விடப்படும். விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக செல்லும் இந்த ஆறு பண்ருட்டி அடுத்த கட்டமுத்து பாளையம் வரை செல்கிறது. கடந்த 1972ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது மலட்டாறு மணல் மேடானது. இதனால் மலட்டாறுக்கு நீர் வரத்து நின்றது. ஜீவநதி மலட்டாறு நிலத்தடி நீர் மேம்பாட்டு எழுச்சிக் கூடல் தலைவர் தட்சணாமூர்த்தி, இயக்குனர் மணிவண்ணன் ஆகியோர் இ.ஐ.டி., சர்க்கரை ஆலை நிர்வாகத்துடன் இணைந்து தூர் வார முயற்சி மேற்கொண்டனர்.
இதற்கிடையே கடந்த 2008ம் ஆண்டு எம்.எல்.ஏ., சபாராஜேந்திரன் முயற்சியால் அரசூர் முதல் கட்டமுத்துப்பாளையம் வரை 17 கி.மீ., தூரம் தூர் வாரப்பட்டது. கடந்த ஆண்டு மழையின் போது ஆற்றில் நீர்வரத்து துவங்கியது. தற்போது பெண்ணையாற்று வெள்ளத்தால் மலட்டாறின் தண்ணீர் ஓடுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதால் 66 கிராம மக்களும் விவசாயிகளும் பயனடைந்துள்ளனர்.
மேலும் மலட்டாற்றில் 50 அடிக்கும்மேல் மணல் இருப்பதால் தூர் வாரிய மண் சரிகிறது. விவசாயிகள் நலன் கருதி ஆற்றின் இருபுறமும் தடுப்புசுவர் அமைக்க வேண்டும். அரசூரில் ஷட்டர் அமைப்பது, கரும்பூர், திருத்துறையூர், கட்டமுத்துப்பாளையம் பகுதிகளில் பாலம் கட்டும் பணியும் நிலுவையில் உள்ளது. இப்பணிகளையும் முடித்தால் 66 கிராம விவசாயிகள் நிரந்தரமாக பயன் பெறுவார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக