கெடிலம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், உபரிநீர் வழிந்தோடும் திருவந்திபுரம் அணை.
கடலூர் :
கடலூர் மாவட்டத்தில் ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, மணல் விலை கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. இதனால் 40 சதவீத கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டன.
கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடம், பெண்ணையாறு, கெடிலம் ஆறு, வெள்ளாறு, மணிமுத்தாறு ஆகிய ஆறுகள் ஓடுகின்றன. இந்த ஆறுகளில் கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம் தாலுகாக்களில் 9 இடங்களில் அரசு அங்கீகாரம் பெற்ற மணல் குவாரிகள் உள்ளன. இந்த குவாரிகளில் அரசு நிர்ணயித்துள்ள மணல் விலை ஒரு யூனிட் 621. மணல் விற்பனையாளர்கள் பொதுமக்களுக்கு லாரிகளில் விநியோகிக்கும் விலை ஒரு மாதத்துக்கு முன்பு வரை, யூனிட்டுக்கு 1000 வரை இருந்தது.மாட்டு வண்டிகளில் 35 கன அடி மணல் வரை ஏற்றப்படுகிறது.
நகரப் பகுதிகளில் மாட்டு வண்டி மணல் ஒரு லோடு விலை 200 ஆக இருந்தது.வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டதால் கடலூர் மாவட்ட ஆறுகளில் தற்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இதனால் மணல் அள்ள முடியாத நிலை உள்ளது. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி மணல் விலையை அபரிமிதமாக உயர்த்திவிட்டன.ஒரு மாதத்துக்கு முன்பு வரை, கடலூர் மாவட்டத்தில் நகரப் பகுதிகளில் ஒரு லாரி (2.5 யூனிட்) அதிகபட்சம் 3 ஆயிரமாக இருந்த மணல் விலை, தற்போது 6 ஆயிரம் வரை உயர்ந்து உள்ளது. மாட்டு வண்டி மணல் ஒரு லோடு 350 வரை உயர்ந்து உள்ளது.
செங்கல் விலையும் அபரிமிதமாக உயர்ந்து வருகிறது. மழைக் காலங்களில் செங்கல் சூளைப் பணிகள் நடைபெறாததால் தற்போது தயாரித்து வைத்து இருக்கும் செங்கற்களே விற்பனைக்கு வருகின்றன. ஏற்கெனவே கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்துக்காக, கூடுதலாக செங்கல் தேவைப்பட்டதால், அதைப் பயன்படுத்தி, செங்கல் விலையை வியாபாரிகள் உயர்த்தத் தொடங்கி விட்டனர். இதனால் கடலூர் மாவட்டத்தில் செங்கல் தட்டுப்பாடும் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டதால், செங்கல் தயாரிப்புப் பணிகள் பெரும்பாலும் முடங்கிவிட்டன.
2 மாதங்களுக்கு முன் அதிகபட்சம் 3 ஆக இருந்த ஒரு செங்கல் விலை தற்போது, 6 ஆக உயர்ந்து இருப்பதாகக் கட்டுமானப் பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.செங்கல், மணல், சிமென்ட், இரும்புக் கம்பிகள் விலைகளும் உயர்ந்து விட்டதால், கட்டுமானத் தொழிலாளர்களின் ஊதியமும் உயர்ந்து வருகிறது. அனைத்து பொருள்களின் விலைகளும் உயரும்போது எங்களுக்குக் கூலியையும் உயர்த்துவதுதானே நியாயம் என்கிறார்கள் கட்டுமானத் தொழிலாளர்கள்.
இதுகுறித்து கடலூர் நகராட்சி உறுப்பினரும் வீடுகள் கட்டுமானக் காண்ட்ராக்டருமான ராமு மேஸ்திரி கூறுகையில்,
"கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்தைத் காரணம் காட்டி செங்கல் விற்பனையாளர்கள் செங்கல் விலையை உயர்த்தி விட்டனர். தற்போது மழைக்காலம் தொடங்கி விட்டதால், செங்கல் விலை இரு மடங்காக அதிகரித்து விட்டது. முன் பணம் கொடுத்தால்தான் செங்கல் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் மணல் அள்ள முடியாத நிலை உள்ளது. இதனால் மணல் விலை இரு மடங்காக அதிகரித்துவிட்டது. சிமென்ட, கம்பி விலைகளும் ஏற்கெனவே உயர்ந்து உள்ளன.
இதனால் 40 சதவீத கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டு விட்டன. புதிதாகக் கட்டுமானப் பணிகளை தொடங்குவோரும், பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டனர். கட்டுமானப் பொருள்களின் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், கட்டுமானத் தொழிலாளர்களின் கூலியும் உயர்ந்து விட்டது. கொத்தனார் சம்பளம் 350-ல் இருந்து 450 முதல் 500 வரை உயர்ந்து இருக்கிறது. சித்தாள் சம்பளம் 150ல் இருந்து 200 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கட்டுமானத் தொழில் பெரும் நெருக்கடியில் உள்ளது' என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக