கடலூர் :
பயிர் செய்த நிலத்தில், அறுவடை செய்த எதிர் கோஷ்டி மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து, நியாயம் வழங்க வேண்டும் எனக் கோரி கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு, உண்ணாவிரதம் இருந்த 74 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் அடுத்த சிந்தாமணிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆளவந்தார். இவருக்கு சொந்தமான 1.25 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட பயிரை, விரோதம் காரணமாக கீழ்பூவாணிக்குப்பத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி, மகன் இளவரசன், வாசுதேவன், எழில் ஆகியோர் சேர்ந்து அறுவடை செய்துவிட்டனர். இது குறித்து, புதுச்சத்திரம் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க., பிரமுகர் கோவர்த்தனன், நாகராஜ் ஆகியோரும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருக்க தடையை ஏற்படுத்தி வருகின்றனர்.
கோவிந்தசாமி உள்ளிட்டோரால், எந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் என் மீது தீண்டாமை, வன்கொடுமை வழக்கு பதிய புகார் செய்வோம் என மிரட்டி வருகின்றனர். இதனால், என் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே, நான் விளைவித்த நிலத்தில் அறுவடை செய்து பிரச்னையை ஏற்படுத்தி வரும் கோவிந்தசாமி உள்ளிட்டோர் மீது, நடடிக்கை எடுத்து அறுவடை செய்த நெல்லுக்கான பணத்தை பெற்றுத் தர வேண்டும் என்று கூறி, நேற்று காலை 10.50 மணிக்கு கடலூர் கலெக்டர் அலுவலகம் முன் ஆளவந்தார் உண்ணாவிரதம் இருந்தார்.
தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் முதியவர் ஆளவந்தாரை கைது செய்து அழைத்துச் சென்றனர். பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குறிஞ்சிப்பாடி தாசில்தார் அலுவலகத்திற்கு கலெக்டர் அலுவலகம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. குறிஞ்சிப்பாடி தாசில்தார் இன்னும் 10 நாட்களில் ஆளவந்தார் பிரச்னை முடித்துக்கொடுக்கப்படும் என, உறுதியளித்துள்ளதைத்தொடர்ந்து ஆளவந்தாரை கடலூர் புதுநகர் போலீசார் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக