உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 08, 2010

ஒவ்வொரு ஆண்டும் கன மழையின்போது "மாற்றம் பெறாத மருவாய்"

நெய்வேலி:

               ஒவ்வொரு ஆண்டும் கன மழையின்போது நெய்வேலியை அடுத்த மருவாய் தேசிய நெடுஞ்சாலை சேதமடைவதும், அதையொட்டி விளை நிலங்கள் பாதிக்கப்படுவதும்,  பின்னர் அவற்றை ஆட்சியில் உள்ளவர்கள் பார்வையிடுவது என்பது தொடர் கதையாக தான் இருக்கிறதே தவிர, சேதமடைந்த பகுதியில் நிரந்தர தீர்வுக்கு யாரும் இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது தான் அப்பகுதி மக்களின் வேதனையாக உள்ளது.

                கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த மருவாய் பகுதியில், சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை மார்க்கத்தில் உள்ள மருவாய் தரைப்பாலம் ஒவ்வொரு ஆண்டு கன மழையின்போது பாலத்தின் மீது தண்ணீர் செல்வது தொடர் கதையாகத்தான் இருந்து வருகிறது. 2005-ல் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பரவனாற்றில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக மருவாய் மற்றும் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தைச் சேர்ந்த பல கிராமங்கள் நீரில் மூழ்கின, பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களும் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்குள்ளானது.

              இதனால் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுóஞ்சாலையில் உள்ள தரைப்பாலம் மழை வெள்ளத்தால் அரித்துச் செல்லப்பட்டு சாலையும் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.இதனால் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அவ்விடத்தைப் பார்வையிட்டு, நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ. 2 ஆயிரம் வழங்கினார்.நிவாரணத் தொகை வழங்கியதோடு சரி, அதன் பின் 2006-ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து புதிய ஆட்சி உருவானது. 

               அத்துடன் இப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் சம்பிரதாயத்துக்காக மேற்கொள்ளப்பட்டதோடு நின்று போனது. அதன்பின் பெரிய அளவில் மழை பெய்யவில்லை என்றாலும், ஓரளவுக்கு மழை பெய்த போதிலும் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.இந்நிலையில் இந்த ஆண்டு பெய்த கன மழையால் மீண்டும் மருவாய் தரைப்பாலம் அரித்துச் செல்லப்பட்டு போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. 

                அப்பகுதியை ஒட்டிய விளை நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதை தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது அமைச்சர்களுடன் சென்று பார்வையிட்டு, நிவாரணப் பணிகள் துரிதப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.ஆனால் அப்பகுதி மக்களோ ஒவ்வொரு முறையும் இந்த இடத்தில் சேதம் ஏற்படுவதும் ஆட்சியில் உள்ளவர்கள் ஆறுதலுக்காக வந்து பார்வையிடுவதோடு சரி. நிரந்தரத் தீர்வு என்பது கானல் நீராகிவிட்டது என்கின்றனர்.

இப்பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் கூறுகையில், 

               கடந்த முறை ஜெயலலிதா வந்தார் பார்த்தார். நிவாரணமாக ரூ. 2 ஆயிரம் வழங்கினார். அதைத் தொடர்ந்து அப்போது எதிர்க்கட்சியில் இருந்த இந்நாள் முதல்வர் கருணாநிதியும், தற்போதைய துணை முதல்வர் ஸ்டாலினும் வந்து பார்த்துச் சென்றனர். அதன்பின் 2006 மே மாதம் நடந்த தேர்தலையடுத்து கருணாநிதி முதல்வரானார். முதல்வரான பின் கருணாநிதியும் மருவாயை மறந்து விட்டார். துணை முதல்வர் ஸ்டாலினும் மறந்து விட்டார். 

                   தற்போது 5 ஆண்டு முடிவில் ஆட்சியிலிருக்கும் துணை முதல்வர் பார்வையிட்டுச் சென்றுள்ளார். இவராவது இதற்கு நிரந்தர தீர்வு காண்பார் என்றால், எங்களுக்கு அதில் துளியும் நம்பிக்கை இல்லை. காரணம் இன்னும் 5 மாதங்களில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.  இவர்கள் தேர்தல் வேலையை பார்ப்பார்களா அல்லது மருவாயை பார்ப்பார்களா அடுத்து ஆட்சிக்கு வருவோர் யாரோ அப்போதாவது இந்த மருவாய் மாற்றம் பெறுமா என்ற கேள்விகளுடன் காத்திருக்கிறோம் என்றார் ராஜசேகர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior