உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 07, 2010

கடலூர் மாவட்டத்தில் கன மழையால் மானாவாரிப் பயிர்கள் பாதிப்பு


கன மழை காரணமாக கடலூர் வண்டிப்பாளையத்தில் பாதிக்கப்பட்ட நட்டு 2 மாதம் ஆன சம்பா நெல் வயல்.
கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக, மானாவாரிப் பயிர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன.

                 கடலூர் மாவட்டத்தில் 15 நாள்களுக்கும் மேலாகப் பெய்து வரும் கன மழை காரணமாக, சம்பா நெல் பயிர்கள் 1.42 லட்சம் ஏக்கரில் தண்ணீரில் மூழ்கின. வெள்ளம் வடிந்த பிறகுதான் நெல் பயிர் சேதம் குறித்து முழு விவரம் கிடைக்கும் என்று வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கிறார்கள்.

              கடலூர் மாவட்டத்தில் பிரதானப் பயிர்களாக 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல், 80 ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டு உள்ள, மானாவாரிப் பயிர்களும் பலத்த சேதத்துக்கு உள்ளாகி இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

              விருத்தாசலம், திட்டக்குடி தாலுகாக்களில் பெரும்பாலும் மானாவாரிப் பயிர்கள் பயிரிடப்படுகின்றன. 10 ஆயிரம் ஏக்கரில் மரவள்ளிக் கிழங்கு, 12 ஆயிரம் ஏக்கரில் மானாவாரிப் பருத்தி, 32 ஆயிரம் ஏக்கரில் மக்காச் சோளம் பயிரிடப்பட்டு உள்ளது. திட்டக்குடி, விருத்தாசலம் வட்டங்களில் ஆடிப்பட்டத்தில் பயிரிடப்பட்டு உள்ள பருத்தி, மரவள்ளிக்கிழங்கு, மக்காச் சோளம் ஆகியவை, தொடர் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

இதுகுறித்து உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் திட்டக்குடி வட்டாரத் தலைவர் வேணுகோபால் கூறுகையில், 

                   தற்போது காய் உற்பத்தி ஆகும் நிலையில் இருந்த மானாவாரி பருத்திச் செடிகள், தொடர் மழையால் அழுகி கருகிப் போகும் நிலை ஏற்பட்டு உள்ளது. பருத்தியில் பெரும்பாலான பகுதி வீணாகி விடும். மரவள்ளிக் கிழங்கு தற்போது வேர்விட்டு, கிழங்கு உற்பத்தி தொடங்கும் நிலையில் இருந்தன. வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சி நிலத்தை காயவிட வேண்டும். ஆனால் தொடர்ந்து பெய்த மழையால், பயிர்கள் அழுகி விட்டன. 

             இனி அவற்றில் கிழங்கு வைக்க வாய்ப்பில்லை. மொத்தத்தில் விருத்தாசலம், திட்டக்குடி வட்டங்களில் பயிரிடப்பட்டு உள்ள பருத்தி, மரவள்ளிக் கிழங்கு, மக்காச் சோளம் ஆகியவற்றில் 50 சதவீதம்கூட மகசூல் தேறுவது கடினம் என்றார்.

இதுகுறித்து மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன் கூறுகையில், 

                கடலூர் மாவட்டத்தில் மூழ்கி இருக்கும் சம்பா பயிரைப் பற்றி அதிகாரிகள் அதிகம் கவலைப்படும் நேரத்தில், வறண்ட பகுதிகளான விருத்தாசலம், திட்டக்குடி தாலுகாக்களில் நட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆன பயிர்களின் நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். நட்டு 20 நாள்களுக்குள் ஆன பயிர்களைவிட, 2 மாதத்துக்கு மேலான பயிர்களுக்குச் செலவிட்ட தொகை மிக அதிகம். அதனால் நஷ்டமும் அதிகம்.

                விருத்தாசலத்துக்கு மேற்கில் உள்ள மணலூர், மளவாளநல்லூர், தொரவளூர், பரவளூர் உள்ளிட்ட 20 கிராமங்கள், விருத்தாசலம் - சிதம்பரம் சாலையில் மணிமுத்தா நதிக்கு வடக்கே கார்குடல், ஆதனூர், குமாரமங்கலம், கோபாலபுரம், கீழனூர், பெரவரப்பூர், புத்தூர் உள்ளிட்ட 16 கிராமங்கள், வெள்ளாற்றுக்கும் மணிமுத்தா நதிக்கும் இடைப்பட்ட கார்மாங்குடி, வல்லியம், கீரனூர், தேவங்குடி, தொழூர், பெருமானூர், சக்கரமங்கலம் உள்ளிட்ட 14 கிராமங்களில் மொத்தம் 20 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் மழையினால் சேதம் அடைந்து உள்ளன.

                பயிர்கள் பாதிக்காததுபோல் காணப்படும் இப்பயிர்களில், சூல் பிடிக்கும் நேரத்தில் தொடர்ந்து மழை பெய்ததால், மகசூல் பெரிதும் பாதிக்கும். நெல் கருப்பு நிறமாக மாறிவிடும். எனவே திட்டக்குடி, விருத்தாசலம் தாலுகாக்களில் முறையாக ஆய்வு நடத்தி, இதுவரை நடவுக்கான செலவைக் கணக்கிட்டு, இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றார்.

                 கரும்பும் நாசம் கம்மாபுரம், நல்லூர், விருத்தாசலம் வட்டாரங்களில் ஜனவரியில் அறுவடைக்குத் தயாராக இருந்த 15 ஆயிரம் ஏக்கர் கரும்பில், பெருமளவு சாய்ந்து கிடக்கின்றன. கணுக்களில் முளை தோன்றிவிட்டன. இதனால் மகசூல் பெருமளவு குறையும் என்றும் வெங்கடேசன் தெரிவித்தார்.  மழையினால் 673 ஹெக்டேர் மரவள்ளிக் கிழங்கு, 2,200 ஹெக்டேர் பருத்தி பயிர்கள் சேதம் அடைந்து இருப்பதாகவும், மக்காச் சோளம் சேதம் குறித்து விவரம் தேகரிக்கப் படுவதாகவும் வேளாண் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior