உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 25, 2011

இன்று தேசிய வாக்காளர் தினம்: 11.5 லட்சம் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை

           நாடு முழுவதும் தேசிய வாக்காளர் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்தவர்களில் தகுதியான 11.5 லட்சம் வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன. 

              இந்தியத் தேர்தல் ஆணையம் ஜனவரி 25-ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. இந்த தினத்தை வாக்காளர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. "வாக்காளர் என்பதில் பெருமை கொள்வேன்! வாக்களிக்கத் தயார் என்பேன்!' என்ற முழக்கத்துடன் தேசிய வாக்காளர் தினம் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. 

            ஆளுநர் மாளிகையில் விழா: மாநில அளவிலான வாக்காளர் தின விழா, ஆளுநர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெறுகிறது. ஆளுநர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை ஏற்கவைத்து ஆளுநர் சிறப்பு உரையாற்றுகிறார். புதிதாக பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையையும் அவர் வழங்குகிறார். 
  
மாவட்ட அளவில்...

            மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் விழாவில் மாவட்ட ஆட்சியர்கள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை அனைவரையும் ஏற்கவைக்கின்றனர். புதிய வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை மற்றும் பேட்ஜ்களை வழங்குகின்றனர்.  சுய உதவிக் குழுக்களின் பஞ்சாயத்து நிலையிலான கூட்டங்களில் வலுவான ஜனநாயகம் அமைக்க பெண்களின் பங்கேற்பின் முக்கியத்துவம் உணர்த்தப்படும். 

           குடியரசுத் தினத்தன்று கூட்டப்படும் கிராம சபைக் கூட்டங்களின் அலுவல் பட்டியலில் வாக்காளர் உரிமைகள், கடமைகள் மற்றும் புதிய வாக்காளர்களைப் பதிவு செய்தல் என்ற சிறப்பு அலுவலும் அடங்கி இருக்கும்.  இந்த ஆண்டு 11.5 லட்சம் பேர் புதிய வாக்காளர்களாக தகுதி படைத்துள்ளனர். தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, 54 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள 29 ஆயிரம் அமைவிடங்களில் விழாக்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  வாக்குச் சாவடிகள் பெரும்பாலும் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளன. 

             எனவே, அவற்றில் சிறப்பு விருந்தினராக அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இருப்பார்.  வாக்குச் சாவடிகளில் நடைபெறும் விழாக்களில் வாக்காளர் புகைப்பட அட்டை அளிக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்தார்.  

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior