உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

செவ்வாய், ஜனவரி 25, 2011

தமிழகத்தில் 20 ஆண்டுகளாக வேளாண்துறை புறக்கணிப்பு: வேளாண் பட்டதாரிகள்

சிதம்பரம்:

          தமிழக அரசு வேளாண்துறையில் 90 சதவீத பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக வேளாண்துறை புறக்கணிக்கப்பட்டு வருகிறது என அனைத்து வேளாண் பட்டாதாரிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.  

இது குறித்து வேளாண் பட்டாதாரிகள் சங்கம் மாநிலத் தலைவர் கா.பசுமைவளவன் சிதம்பரத்தில் சனிக்கிழமை தெரிவித்தது: 

             தமிழகத்தில் விளைநிலங்கள் வீட்டுமனைகளாகவும், பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகளுக்காக தாரை வார்க்கப்பட்டு வருகிறது.  இதனால் வேளாண் தொழில் அழியும் நிலை உருவாகி உணவு பஞ்சம் ஏற்படும். எனவே விளைநிலங்களை விற்பதைத் தடுக்க அரசு சட்டம் கொண்டு வர வேண்டும்.  அமெரிக்கா உள்ளிட்ட பன்னாடுகளில் தடை செய்யப்பட்ட எனடோசல்மான், டிடிடி போன்ற மருந்துகள் இந்தியாவில் கொள்ளைப் புறமாக விற்கப்பட்டு வருகிறது.  

            தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 933 கிராமப்புற வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூடப்பட்டுள்ளன.  தமிழகத்தில் 14 ஆயிரம் வேளாண் பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். ஆனால் காலியாக உள்ள பணியிடங்களை அரசு நிரப்பவில்லை.  அனைத்து பள்ளிகளிலும் வேளாண்மை அடிப்படை பாடமாகக் கொண்டு வரப்படும் என திமுக அரசு பதவி ஏற்றவுடன் சட்டமன்றத்தில் 4.8.2006-ல் வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அறிவித்தார்.  

            இதை நடைமுறைப்படுத்தி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டதாரிகள் பதவி மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணிநியமனம் செய்ய வேண்டும்.  தமிழக அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 30.6.2009-ல் வேளாண் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 200 பேர் சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெற்றது.  அவர்களுக்கு உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும். வேளாண் பட்டதாரிகளின் வாழ்வுரிமையான தமிழ்நாடு வேளாண் மன்றம் நிலுவையில் உள்ளதை சில திருத்தங்கள் செய்து நடைமுறைபடுத்த வேண்டும்.  

               மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜனவரி 28-ம் தேதி சென்னை அண்ணாசாலை காயிதேமில்லத் மணி மண்டபம் முன்பு முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் போராட்டமாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.  அதன் பின்னரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடல் தமிழகத்தில் உள்ள வேளாண் கல்லூரிகளில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என கா.பசுமைவளவன் தெரிவித்தார்.  அப்போது மாநிலப் பொருளர் ப.உதயகுமார், மாவட்டத் தலைவர்கள் கே.சத்தியநாராயணன், கே.முத்துக்குமரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior