உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 05, 2011

சென்னை நகருக்குள் செல்வதில் கடலூர் மாவட்ட மக்கள் அலைக்கழிப்பு

கடலூர்:

             கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, பேருந்துகளில் சென்னைக்குள் நுழையும் மக்கள், நகரப் பேருந்துகளை பிடிப்பதில் பெரிதும் அலைக்கழிக்கப்படுகிறார்கள். 

              முன்பெல்லாம்  மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்கள் தாம்பரம், கிண்டி, அண்ணா சாலை வழியாக  பிராட்வே பஸ் நிலையம் செல்லும். தாம்பரத்தில் இருந்து பிராட்வே வரை, வழிநெடுகிலும் பல்வேறு அலுவலகங்களுக்கும், குடியிருப்புப் பகுதிகளுக்கும் ஒட்டிய நிறுத்தங்களில் மக்கள் இறங்கி, தங்கள் பணிகளை எளிதாகச் செய்துவிட்டுத் திரும்ப வசதியாக இருந்தது.  

            சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் கோயம்பேடு பஸ்நிலையத்தை உருவாக்கி, அங்கிருந்து நகரப் பேருந்துகளைப் பிடித்து, சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றாக வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டு உள்ளது. இதனால் சென்னை நகர வாசிகளுக்கு பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால் கடலூர், விழுப்புரம், புதுவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வருவோர், பெரும் சிரமங்களையும் கால விரயத்தையும் சந்திக்க நேரிடுகிறது.  

               கடலூர், விழுப்புரம். புதுவை வழியாக சென்னைக்கு வரும் பஸ்கள், தாம்பரம் வழியாக, கோயம்பேடு பஸ்நிலையம் சென்றது, அண்மைக் காலமாக தாம்பரம் செல்லாமலேயே, பஸ்கள் பெருங்களத்தூரில் இருந்து மதுரவாயில் வழியாக கோயம்பேடுக்கு திருப்பி விடப்படுகிறது. இதனால் மாவட்டங்களில் இருந்து வருவோர் ஒன்று கோயம்பேடு செல்ல வேண்டும் அல்லது பெருங்களத்தூரில் இறங்கிவிட வேண்டும். 

             சென்னைக்குள் அலுவலகப் பணிகள், வர்த்தகப் பணிகளுக்காகவும், உறவினர்களைச் சந்திக்க செல்ல வேண்டியவர்களும், பெருங்களத்தூரில் இருந்து வண்டலூருக்கு நகர பஸ்களைப் பிடித்து வண்டலூர் அல்லது தாம்பரம் சென்று, அங்கிருந்து மற்றொரு நகரப் பஸ்ûஸ பிடித்து, தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குப் போகும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. குடும்பத்துடன் பெண்கள், குழந்தைகளுடன் வருவோர், சுமைகளுடன் வருவோர், சென்னைக்குப் புதிதாக வருவோர் இதனால் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். 

               மாவட்டங்களில் இருந்து வரும் பஸ் பயணிகளில் 75 சதவீதம், பெருங்களத்தூர் அல்லது  திருவான்மியூரில் (இ.சி.ஆர். பஸ்கள்) இறங்கி விடுகிறார்கள்.  முன்பெல்லாம் கடலூரில் இருந்து, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அண்ணா சாலையில் உள்ள அரசு அலுவலகங்களுக்குச் செல்வோர், காலை நேரங்களில் 4 மணி நேரத்தில் செல்லமுடியும். தற்போது அரசு பஸ்களின் வேகம், எரிபொருள் சிக்கனம் என்ற பெயரில் கட்டுப்படுத்தப்படுகிறது. 

             தாம்பரத்துக்குள் பஸ்கள் செல்வதும் மாற்றப் பட்டதால், கடலூரில் இருந்து கோயம்பேடு செல்ல 5-30 மணி நேரம் ஆகிறது. அங்கிருந்து உயர்நீதிமன்றம் மற்றும் அண்ணா சாலையிலுள்ள  அலுவலகங்கள் செல்ல, மேலும் ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆகிறது. அதாவது கடலூரில் இருந்து சென்னை உயர்நீதி மன்றம் செல்ல தற்போது குறைந்தது 6-30 மணி நேரம் ஆகிறது. இதேபோல் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்ல 2 மணி நேரம் வரை அதிகமாகிறது.  சென்னையில் இருந்து திரும்பி கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்வோரின் நிலை இன்னும் பரிதாபம். 

              சென்னையில் எங்கு இருந்தாலும், கோயம்பேடு சென்றால்தான் பஸ் பிடிக்க முடியும். இடையில் தாம்பரத்திலோ, திருவான்மியூரிலோ (இ.சி.ஆர். பஸ்கள்) ஏறினால்கூட பஸ்களில் நிற்கக்கூட இடம் கிடைப்பது இல்லை.  திருவான்மியூர், தாம்பரம் பகுதிகளைச் சேர்ந்தோர் கோயம்பேடு சென்று பஸ் ஏறுவதால் சென்னை சென்று வருவோருக்கு 2 மணி நேரத்துக்குமேல் காலவிரயம், மனஅழுத்தம் ஏற்படுபடுகிறது.  

              கோயம்பேடுக்கு மதுரவாயில் வழியாக பஸ்கள் செல்வதால், மதுரவாயிலில் இருந்து கோயம்பேடு வரை, இடையில் பல ஊர்களுக்கும் இறங்கிச் செல்ல வாய்ப்பு இருந்தும், பைபாஸ் சாலையாக இருப்பதால் எங்கும் இறங்க முடியாத அவலம் உள்ளது. பெருங்களத்தூர் பகுதியில் பிரமாண்டமான பஸ்நிலையம் வரப் போவதாகச் சொல்கிறார்கள். எப்போது என்பதை யார் அறிவார்?  மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் பயணிகளின் வசதிக்காக, சென்னை வரும் அனைத்து பஸ்களும் தாம்பரம் வரை வந்து திரும்பி, மதுரவாயில் வழியாக கோயம்பேடு செல்லலாம். 

               கோயம்பேட்டில் இருந்து கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், புதுவைக்கும் இயக்கப்படும் பஸ்களில் 50 சதவீதத்தை, தாம்பரம் மற்றும் திருவான்மியூரில் இருந்து புறப்படச் செய்யலாம் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். சென்னை மக்களைப் போன்று, சென்னை வரும் மாவட்ட மக்களின் சங்கடங்களையும் அரசு கவனத்தில் கொள்ளுமா?

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior