கடலூர் : 
         கடலூர் தீயணைப்பு அலுவலகத்தில் தீயணைப்புத் துறைக்கு  வழங்கப்பட்டுள்ள அவசர கால மீட்பு ஊர்தி செயல்பாடுகள் குறித்து செயல் விளக்க  பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழகத்தில் தீ விபத்து, சாலை விபத்து, சுனாமி,  வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று  மீட்புப் பணியில் ஈடுபடுவதற்கு வசதியாக அனைத்து உபகரணம் கொண்ட "அவசர கால  மீட்டு ஊர்தியை' சென்னையில் இரண்டு நிலையங்கள் மற்றும் கடலூர், திருச்சி,  சேலம், நாகை, மதுரை, கோவை உள்ளிட்ட எட்டு இடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.   இந்த ஊர்தியில் 100க்கும் மேற்பட்ட கருவிகள் உள்ளன.
             இதில் முக்கியமாக விபத்தின் போது சிக்கியவர்களை மீட்க நவீன கட்டர்  இயந்திரம், ஸ்பிட்டர், ஹைட்ராலிக் ஜாக்கி, 20 டன் எடையை தூக்கவல்ல ஏர்  லிப்ட் பேக், புல்லிங் செயின், லிப்ட்டில் சிக்கிக் கொள்ளும் நபரை மீட்க  உதவும் "டோர் பிரேக்கர்', அவசர கால ஆக்ஸிஜன் சிலிண்டர், 5 கே.வி., திறன்  கொண்ட ஜெனரோட்டர் கருவி, அதிக எடைகளை இழுக்கும் சங்கிலி, உயர் மின் கோபுர  விளக்கு உள்ளிட்ட பல்வேறு நவீன மீட்பு கருவிகள் தயார் நிலையில் உள்ளன.  நேற்று முதல் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.
              கடலூர் தீயணைப்பு நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த அவசரகால மீட்பு  ஊர்தியில் மீட்புக் கருவிகளை எப்படி கையாள்வது குறித்து பணியிடை  பயிற்சியில் தீயணைப்பு துறை வீரர்களுக்கு செயல் விளக்க பயிற்சி  அளிக்கப்பட்டது. கோட்ட தீயணைப்பு அதிகாரி குமாரசாமி தலைமை தாங்கினார்,   நிலைய அலுவலர்கள் கடலூர் குமார், குறிஞ்சிப்பாடி வெங்கடேசன், சிதம்பரம்  வீரபாகு பங்கேற்றனர். மேலும் பயிற்சியில் பங்கேற்ற தீயணைப்பு வீரர்களுக்கு  108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின்  அளவு குறித்து பரிசோதனை செய்யும் முகாம் நடந்தது. இதில் 100க்கு மேற்பட்ட  வீரர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார்  செய்திருந்தார். 

0 கருத்துகள்:
கருத்துரையிடுக