
 சிதம்பரம்: 
            வங்கியில் பணம் செலுத்த சென்ற இருவரை கத்தியால் வெட்டி, 6  லட்சம் ரூபாயை கொள்ளையடித்த ஹெல்மெட் அணிந்த மர்ம ஆசாமிகள் இருவரை போலீசார்  தேடி வருகின்றனர்.
                  கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் ரயில்வே கேட் அருகே வேளாண்  உற்பத்தியாளர் விற்பனை சங்கம் உள்ளது. இங்கு பணிபுரியும் காசாளர்  பாலமுருகன் (45), ஆடிட்டர் தண்டபாணி ஆகியோர் நேற்று மதியம் 2.30 மணியளவில்  தெற்கு வீதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் செலுத்த 6 லட்சம் ரூபாயுடன்  தனித்தனி மோட்டார் சைக்கிளில் சென்றனர். பணப்பையை பாலமுருகன் எடுத்துச்  சென்றார். 
              வங்கியில் 3 மணிக்கு மேல் வருமாறு திருப்பி அனுப்பியதால், பணத்தை  மீண்டும் தங்களது அலுவலகத்தில் வைக்க இருவரும் திரும்பினர். அண்ணாமலைப்  பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மையம் அருகே வந்த போது, ஹெல்மெட் அணிந்து  மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பாலமுருகன் மற்றும் தண்டபாணியை வழிமறித்து  கத்தியால் வெட்டி பணத்தை பறித்துக் கொண்டு தப்பினர். 
             படுகாயமடைந்த  இருவரும் சிதம்பரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவலறிந்த  டி.எஸ்.பி., மோகன் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார்.  வங்கியில் பணத்தை திருப்பி அனுப்பும்போது அவர்களை நோட்டமிட்டு  பின்தொடர்ந்து இச்செயலை செய்துள்ளது தெரியவந்தது. பட்டப்பகலில் ஆள்  நடமாட்டம் உள்ள பகுதியில் துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப் பதிந்து  விசாரிக்கின்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக