உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 17, 2011

குப்பை மேடாகிய கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம்

கடலூர்:

             கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம் தற்போது குப்பை மேடாகக் காட்சி அளிக்கிறது.

             மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பரந்து விரிந்து கிடக்கும் மஞ்சக்குப்பம் மைதானம் பொதுக் கூட்டங்கள் நடத்தவும், பொருள்காட்சிகள், கண்காட்சிகள், மாநாடுகள் நடத்தவும் கடலூர் நகராட்சி அனுமதி அளிக்கிறது. இதற்காக நகராட்சி கட்டணமும் வசூலிக்கிறது. எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் நகராட்சி அனுமதி வழங்கும்போது, எந்த நிலையில் மைதானம் இருந்ததோ அதே நிலையில் சரி செய்து மீண்டும் வழங்க வேண்டும் என்று, நகராட்சி விதிமுறைகளில் உள்ளது.

            அண்மையில் மஞ்சக்குப்பம் மைதானத்தின் பெரும்பகுதி தனியார் நிறுவனப் பொருள்காட்சி நடத்த நகராட்சியால் அனுமதிக்கப்பட்டு இருந்தது. ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்த பொருள்காட்சி, இரு தினங்களுக்கு முன் முடிவுற்றது. அதன் பிறகு மைதானத்தைப் பார்த்தால் குப்பை கூளங்கள் நிறைந்து காணப்படுவது, மிகுந்த அருவெறுப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. பொருள்காட்சி பொழுதுபோக்கு அம்சங்களுக்காக ஆங்காங்கே தோண்டப்பட்ட பள்ளங்கள், உருவாக்கப்பட்ட மேடுகள் அப்படியே விடப்பட்டதால், மைதானம் பார்ப்பதற்கு வாழை அறுவடை செய்யப்பட்ட தோட்டம் போல் காட்சி அளிக்கிறது.

             இந்த மைதானத்தின் மையப் பகுதியில் நகாரட்சி சார்பில் ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. காரணம் மைதானத்தில் மாலை நேரங்களில் பொதுமக்கள் பலர் காற்றுக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் குடும்பத்துடன் வந்து அமர்வது வழக்கம். மேலும் நகரின் மையப் பகுதியில் இந்த மைதானம் அமைந்து இருப்பதால், நகருக்குள் கடல் காற்று எளிதாகப் பரவி, கோடைக் காலங்களில் வெயிலைத் தணிப்பதற்கும் பெரிதும் உதவுகிறது.

           இத்தகைய பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட மஞ்சக்குப்பம் மைதானம், தற்போது குப்பை மேடாக மாற்றப்பட்டு இருப்பது நகர மக்களின் மனங்களைக் காயப்படுத்தும் செயலாகக் கருதப்படுகிறது. மைதானம் குப்பை மேடாகக் காட்சி அளிப்பதற்குக் காரணமான பொருள்காட்சி நிறுவனம் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் கருத்து தெரிவித்து உள்ளார்.

                  மஞ்சக்குப்பம் மைதானத்தில் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கும்போது, வைப்புத் தொகையாக ரூ.400 மட்டும் நகராட்சி வசூலிக்கிறது. இந்தத் தொகை போனால் போகட்டும் என்று நிகழ்ச்சிகளை நடத்துவோர், தாங்கள் ஏற்படுத்திய சுகாதாரக் கேடுகளை அப்படியே விட்டு விட்டுச் சென்று விடுகிறார்கள். பின்னர் நகராட்சி நிர்வாகம் பல ஆயிரம் செலவிட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே இந்த வைப்புத் தொகையை உயர்த்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior