சிதம்பரம் நடராஜர் கோயிலில் மகாபிஷேகத்தை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற அதிருத்ர மகாயாகத்தில் பங்கேற்ற பொது தீட்சிதர்கள்.
சிதம்பரம்:
சிதம்பரம் நடராஜர் கோயிலில் புதன்கிழமை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகமும், அதிருத்ர மகாயாகமும் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.
நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறும். ஆனி திருமஞ்சன தரிசனம், மார்கழி ஆருத்ரா தரிசனம் ஆகிய இருமுறை ஆயிரங்கால் மண்டபத்திலும் மகாபிஷேகம் நடைபெறும். சித்திரை, புரட்டாசி, மாசி, ஆவணி மாதங்களில் நடைபெறும் மகாபிஷேகம் சித்சபையின் முன்பு உள்ள கனகசபையில் நடைபெறும். மாசி மாத மகாபிஷேகத்தை முன்னிட்டு உலக அமைதி வேண்டி 121 பொது தீட்சிதர்கள் பங்கேற்ற ருத்ரஜப பாராயணம் பிப்ரவரி 11-ம் தேதி தொடங்கி புதன்கிழமை காலை முடிவுற்றது. அதன் பின்னர் ஆயிரங்கால் மண்டபம் எதிரே உள்ள நடனப் பந்தலில் அதிருத்ர மகாயாகம் நடைபெற்றது.
பின்னர் மகாயாகத்திலிருந்து கலச நீர் கொண்டு வரப்பட்டு கனகசபையில் வீற்றிருந்த ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் மாலை 6 மணிக்கு தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்றது. பால், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், விபூதி, இளநீர், புஷ்பம் உள்ளிட்டவை குடம் குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நடராஜா என கோஷமிட்டு தரிசித்தனர்.
கருத்து வேறுபாடு நீங்கியது:
மகாபிஷேகத்தை பஞ்சாங்கப்படி பிப்ரவரி 17-ம் தேதிதான் நடத்த வேண்டும் என ஒரு தரப்பு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆண்டுக்கு ஆறுமுறை நடத்தப்படும் மகாபிஷேகத்தில் நட்சத்திரத்தை கணக்கிட்டும், 3 வளர்பிறை சதுர்தசியினை கணக்கிட்டும் மகாபிஷேகம் நடத்தப்படும். பிப்ரவரி 16-ம் தேதி மாலையில் சதுர்தசி பிறந்து விடுவதால் 16-ம் தேதி மாலை மகாபிஷேகம் நடத்துவதுதான் சரியானது என செயலர் ரா.சி.வைத்தியலிங்க தீட்சிதர் தெரிவித்தார். இந்நிலையில் தீட்சிதர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அறிவித்தபடி பிப்ரவரி 16-ம் தேதி புதன்கிழமை தீட்சிதர்கள் ஒருங்கிணைந்து மகாபிஷேகத்தை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக