உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, பிப்ரவரி 04, 2011

கல்வித்துறை விதிகளை மீறும் கடலூர் பள்ளிகள்?

கடலூர்:

                  கடலூர் மெட்ரிக் பள்ளிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்து கல்வித்துறை விதிகளை மீறுவதாக உள்ளது.  

              மெட்ரிக் பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை மே மாதத்தில்தான் நடத்த வேண்டும் என்றும், அதற்கு முன்னரே விண்ணப்பப் படிவங்களை விநியோகிப்பதும், பெற்றோரை நேர்காணலுக்கு அழைப்பதும் கூடாது என்று, 2009-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அடிப்படைக் கல்வி உரிமைச் சட்டம் தெளிவாகத் தெரிவிக்கிறது.  ஆனால் கடலூரில் சில மெட்ரிக் பள்ளிகள் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு விண்ணப்பப் படிவங்களை இப்போதே விநியோகித்து வருகின்றன.

             விண்ணப்பப் படிவங்களை வழங்கும்போதே, பெற்றோரை நேர்காணலுக்கு அழைத்து, அவர்கள் பட்டம் படித்தவர்களாகவும், பள்ளி முதல்வரின் கேள்விகளுக்கு மிகவும் பௌய்வியமாக பதில் அளிப்பவர்களாக இருந்தால் மட்டுமே விண்ணப்பப் படிவங்கள், வழங்கப்படுகின்றன.  பிப்ரவரி முதல் வாரத்தில் விண்ணப்பப் படிவங்கள் வழங்குவது, கடைசி தேதி என்றும் அறிவித்து உள்ளன. அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு நேர்காணல் தேதி அறிவிக்கப்படும் என்றும் சில மெட்ரிக் பள்ளி நிர்வாகங்கள் அறிவித்து உள்னன.  

             சில பள்ளிகள் இப்போதே மாணவர்கள் சேர்க்கையை முடித்துக் கொள்கின்றன. பள்ளிகளில் ஜாதிச் சான்றிதழ், பிறந்த தேதிக்கான சான்றிதழ்களும் கேட்கப்படக் கூடாது என்றும், அடிப்படைக் கல்வி உரிமைச் சட்டம் தெரிவிக்கிறது. ஜாதிச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு இப்பள்ளிகள் ஒன்றும், எல்.கே.ஜி. யிலேயே இட ஒதுக்கீட்டைக் கடைபிடிக்கப் போவதில்லை.   தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு, இந்தக் கட்டணக் கல்விக் கூடங்கள், சலுகைகளை வாரி வழங்கப்போவதும் இல்லை.  கல்வி உதவித்தொகைகளை பெற்றுத்தரப் போவதும் இல்லை. அப்படி இருக்க இந்தக் கல்வி நிலையங்கள், ஜாதிச் சான்றிதழைக் கேட்டு பெற்றோரை ஏன் துன்புறுத்த வேண்டும் என்று தெரியவில்லை என்கிறார்கள் பெற்றோர்.   மேலும் பிறந்த தேதிக்கான சான்றிதழ்களையும், மாணவர்களைச் சேர்க்கும் போது வழங்கக் தேவையில்லை என்றும் கல்வி உரிமைச் சட்டம் தெரிவிக்கிறது.

            பெற்றோர் தாங்களாக எழுதிக் கொடுத்தால் போதும் என்றும் சட்டம் கூறுகிறது. சட்டம் இவ்வாறு இருக்க, ஜாதிச் சான்றிதழையும், பிறப்புச் சான்றிதழையும் கேட்டு பெற்றோரை மிரட்டி வருகின்றன கடலூர் மெட்ரிக் கட்டணக் கல்விக் கூடங்கள்.÷இதனால் பெற்றோர் தாலுகா அலுவலகங்களுக்கும் நகராட்சி உள்ளிட்ட ஏனைய அரசு அலுவலங்களுக்கும் நடையாய் நடக்கும் நிலைக்கும், படாதபாடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.  கொஞ்சம் கல்வி நன்றாக இருக்கிறதே என்று நினைத்து இப்பள்ளிகளை நாடினால், ஏதேனும் ஒன்றைக் கேட்டு பெற்றோரை அலைக்கழிக்க வேண்டும்.  தாங்கள் அரசுக் கல்விக் கூடங்களைவிட உயர்ந்தவர்கள் என்று, காட்டிக் கொள்ள வேண்டும் என்பதே இவர்களின் குறிக்கோளாக இருப்பதாகப் பெற்றோர் குமுறுகிறார்கள். 

               இது குறித்துக் கல்வித்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடலூர் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.   இப்பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன், கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அரசின் கட்டாயக் கல்விச் சட்டத்துக்கு முரணான, மெட்ரிக் பள்ளிகளின் இச்செயல்களை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.  சம்மந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார்.  

இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 

               இத்தகைய புகார்கள் கல்வித் துறைக்கு வந்துள்ளன. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior