உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வெள்ளி, பிப்ரவரி 04, 2011

கடலூரில் சுழல்காற்று, கடல் கொந்தளிப்பு: மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை


பலத்த கடல் கொந்தளிப்பு காரணமாக, கடலூர் உப்பனாற்றில் முடங்கிக் கிடக்கும் படகுகள்.
 
கடலூர்:

            கடலூரில் வியாழக்கிழமை வழக்கத்துக்கு மாறாக பலத்த சுழல்காற்று வீசியது. பலத்த கடல் கொந்தளிப்பு காரணமாக, மீனவர்கள் 2 நாள்களாக மீன் பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.  

             இலங்கை அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் கடலூர் மாவட்டக் கடலோரப் பகுதிகளில், 2 நாள்களாக, பலத்த சுழல்காற்று வீசிக் கொண்டு இருக்கிறது. சாலைகளில் செல்வோர் மீது மணலை வாரிக் கொட்டும் அளவுக்கு காற்று பலமாக உள்ளது.  இரவு மற்றும் காலை நேரங்களில் பனி சற்று குறைந்து காணப்பட்டது. ஆனால் நாள் முழுவதும், வடகிழக்கு பருவமழை காலம் போல் வானம், மேக மூட்டத்துடன் காணப் பட்டது.  

           வழக்கமாக கடலூரில் 10 முதல் 12 கி.மீ. வேகத்தில் கடல் காற்று வீசும். ஆனால் கடந்த 2 நாள்களாக காற்றின் வேகம் 32 கி.மீ. முதல் 35 கி.மீ. வரை இருப்பதாக கடலூர் துறைமுக அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்தார்.  வங்கக் கடலில் வழக்கத்துக்கு மாறாக கொந்தளிப்பு அதிகம் காணப்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர். இதனால் வியாழக்கிழமை 2-வது நாளாக கடலூர் மாவட்ட மீனவர்கள், மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை என்று மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன் தெரிவித்தார். 

              கடலில் நீரோட்டம் மாறியிருந்ததாகவும், பலத்த காற்று காரணமாக கடலில் படகுகளை நிலை நிறுத்த முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.  இதன் காரணமாக அங்காடிகளில் மீன் வரத்து குறைந்தும், விலை அபரிமிதமாக உயர்ந்தும் காணப்பட்டது. கடலூரில் தற்போது அதிகமாகப் பிடிபடும் சங்கரா மீன் விலை, மற்ற நாள்களில் கிலோ ரூ. 100 முதல் ரூ. 120 வரை இருக்கும். ஆனால் வியாழக்கிழமை கிலோ ரூ. 160 ஆக உயர்ந்தது.  

வானிலை மாற்றம் குறித்து விவசாயிகள் கூறியது 

                 பலத்த காற்று காரணமாக முதிர்ந்த நெற்பயிர்கள் சாயத் தொடங்கி விட்டன. காற்றில் ஈரப்பதம் குறைந்து வருவதால், மணிலா போன்ற பயிர்கள் எளிதில் காயத் தொடங்கி இருப்பதாகத் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior