அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு இணையாக, கல்லூரி  மாணவ-மாணவிகளும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். 
"கட்சிகளுக்காக அல்ல...
               "தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்" என வலியுறுத்தியே அவர்கள் பிரசாரம் செய்யவுள்ளனர். 2011-ம்  ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் களம் அனைவருக்கும் புதிதாக அமைந்துள்ளது.  தேர்தல் ஆணையத்தின் விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளதால் அரசியல்  கட்சியினரின் பிரசாரத்தில் வழக்கமான உற்சாகம் காணப்படவில்லை. 
கார்கள்  அணிவகுக்க...
               கொடிகள் வரிசையாய் தோரணம் கட்ட...என தமிழகத்துக்கே உரிய  வழக்கமான பிரசாரம் இப்போது இல்லை. வேட்பாளர்களின் செலவுக் கணக்குகளை  தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனிப்பதே இதற்குக் காரணம். தமிழகத்தில் இதுவரை  பிரசாரம் பெரிய அளவில் களைகட்டவில்லை.
மாணவர்களின்  பிரசாரம்...
                 அரசியல் கட்சியினரின் மெல்லிய பிரசாரத்துக்கு நடுவே, தேர்தல்  ஆணையமும் தனது பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது. வாக்களிப்பதன் அவசியத்தை  வலியுறுத்தும் வாசகங்களை வெளியிட்டும், நடிகர், நடிகைகள் மூலம் அந்த  வாசகங்களை பேசச் செய்தும் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ளது. ஆணையத்தின்  பிரசாரம் ஒருபுறம் இருக்க, கல்லூரி மாணவர்களும் பிரசார களத்தில்  இறங்கியுள்ளனர். 
                  "வாக்குப் பதிவின் அவசியத்தை வலியுறுத்தும் வாசகங்களை  பதாகைகளாக தயார் செய்து அருகில் உள்ள பகுதிகளில் பேரணியாக நடத்தலாம்' என்று  கல்லூரி நிர்வாகங்களை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இதைத்  தொடர்ந்து, பிரசாரத்துக்கான ஆயத்தப் பணிகளில் கல்லூரி நிர்வாகங்கள்  ஈடுபட்டு வருகின்றன.
தேர்தல் பணி... 
                 தமிழகத்தில் மொத்தம் 54 ஆயிரம்  வாக்குச் சாவடிகள் உள்ளன. அவற்றில் 20 ஆயிரம் வாக்குச் சாவடிகள் விடியோ  கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. 10 ஆயிரம் வாக்குச் சாவடிகள்  சாதாரண கேமராக்கள் மூலமும், மீதமுள்ள வாக்குச் சாவடிகள் வெப் கேமராக்கள்  மூலமும் கண்காணிப்பு செய்யப்பட உள்ளன. வெப் கேமராக்கள் மூலம்  கண்காணிக்கும் பணியிலும், அதற்கான தொழில்நுட்பத்தை கையாளவும் பொறியியல்  உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அடுத்தபடியாக தேர்தல் பணியில் மாணவர்கள்  ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.


 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக