உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 30, 2011

விலையேற்றத்துக்கு கருணாநிதி குடும்பமே காரணம்: ஜெயலலிதா குற்றச்சாட்டு


கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் செவ்வாய்க்கிழமை அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திரண்டிருந்த ஆயிரக்கணக்கான கூட்டத்தினரிடையே ஜெயலலிதா 
சிதம்பரம் :
 
            தமிழகத்தில் விலையேற்றம் என்பது இயற்கையானது அல்ல. கருணாநிதியின் குடும்பத்தால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று கடலூர் மாவட்ட தேர்தல் பிரசாரத்தில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
 
கடலூர் மாவட்டத்தில் அதிமுக கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் புவனகிரி தொகுதி செல்வி ராமஜெயம் (அதிமுக), சிதம்பரம் தொகுதி கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), காட்டுமன்னார்கோவில் தொகுதி நாக.முருகுமாறன் (அதிமுக), திட்டக்குடி தொகுதி தமிழழகன் (தேமுதிக) ஆகியோரை அறிமுகப்படுத்தி ஜெயலலிதா பேசியது:
 
                 கருணாநிதி குடும்ப ஆட்சிக்கு எதிராக இங்கு எழுச்சியுடன் கூடி உள்ளீர்கள்.கச்சத்தீவை தாரை வார்த்தவர். இலங்கைத் தமிழர்கள் பலஆயிரம் பேர் கொலை செய்யப்பட்டதற்கு உறுதுணையாக இருந்தவர். தமிழக மீனவர்கள் படுகொலைக்கு உறுதுணையாக இருந்தவர்.ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் தமிழகத்துக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியவர். ஊழல் செய்வதில் மட்டுமல்லாமல், மக்களை ஏமாற்றுவதிலும் வல்லவர். அவர்தான் இப்போதைய முதல்வர் கருணாநிதி.ஊழல் செய்து தமிழகப் பொருளாதாரத்தை சீர்குலைத்தவர் அவர். 
 
                 ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா மூலம் 1000 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது.ஏழை-எளிய மக்களிடம் 1 ஏக்கர் நிலம் ரூ.60 ஆயிரம் என குறைந்த விலைக்கு வாங்கப்பட்டது. பின்னர் தொழிற்சாலை அமைக்க தொழிலதிபர்களிடம் 1 ஏக்கரை ரூ.18 லட்சத்துக்கு விற்று ரூ.180 கோடி பணத்தை சுருட்டியுள்ளனர்.ஒரு மாவட்டத்தில் மட்டும் ரூ.180 கோடி என்றால், அனைத்து மாவட்டங்களில் கருணாநிதி எவ்வளவு பணத்தை சுருட்டியிருப்பார்?. 
 
                  தமிழகம் முழுவதும் மணல் கொள்ளையில் ரூ.50 ஆயிரம் கோடி, கிரானைட் கொள்ளையில் ரூ.80 ஆயிரம் கோடி என கருணாநிதி குடும்பத்தினர் பலவழிகளில் பல ஆயிரம் கோடி பணத்தைச் சுருட்டியுள்ளனர். மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதி, காவிரி நதி நீரை பெற்றுத்தர முயற்சிக்கவில்லை. ஏனென்றால் கர்நாடகத்தில் உள்ள தன் குடும்பத்தினரின் வருமானம் பாதிக்கும் என்பதால் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.ஆட்சி அதிகாரத்தையும், தன்னையும், தன் குடும்பத்தினரையும் பாதுகாக்க தன்னை மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என பேசி வருகிறார்.
 
                  உங்களை விரட்டிவிட்டு தமிழகத்தில் உள்ள சொத்துகளை குடும்பச் சொத்தாக்கிக் கொள்ள நினைக்கும் கருணாநிதியை நீங்கள் விரட்டியடிக்க வேண்டும்.இப்படியே விட்டுவிட்டால் கருணாநிதி தமிழகத்தையே விற்றுவிடுவார். எனவே தமிழகத்தில் அவர் குடும்பத்தோடு அகற்றப்பட வேண்டும். எனவே அனைவரும் ஒற்றுமையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்.இந்தத் தேர்தலில் ஒவ்வொருவரும் குடும்பத்துடன் வந்து ஜனநாயகக் கடமையான தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்.
 
வாக்குறுதிகள்: 
 
               கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்தவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். வீராணம் ஏரி தூர்வாரப்படும், கடல் நீர் உள் புகுவதைத் தடுக்க வெள்ளாற்றில் தடுப்புச்சுவர் கட்டப்படும். தேவங்குடி-புத்தூர் இடையே பாலம் அமைக்கப்படும். சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக சீர்கேடுகள் களையப்படும். இப்பகுதியில் உள்ள அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் நான் நன்கு அறிவேன். எனவே ஒரு குடும்பத்தின் பிடியில் உள்ள தமிழகத்தை மீட்கவும், தமிழகத்தில் கருணாநிதி குடும்பத்தினர் அபகரித்துள்ள சொத்துக்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கவும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களியுங்கள் என்றார் ஜெயலலிதா.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior